அரசியல் இலாபம் தேடும் நோக்கில் என்னை பயங்கரவாதத்தின் பக்கம் தள்ள சிலர் முயற்சி

எனக்கோ எனது குடும்பத்துக்கோ 55 ஏக்கர் காணி மட்டுமே சொந்தம்

தெரிவுக் குழுவில் சாட்சியம்

அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே தன்னை பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளுவதற்கு ஒருசிலர் முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சஹ்ரானை ஒருபோதும் சந்தித்திருந்ததில்லையென்றும், குண்டுத் தாக்குதலின் பின்னரே அவரைப் பற்றித் தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இத னைத் தெரிவித்தார். தனக்கோ அல்லது தனது குடும்பத்துக்கோ 55 ஏக்கர் நிலமே சொத்தமாக உள்ளது. இதற்கு மேலதிகமாக ஏதாவது நிலம் இருந்தால் அவற்றை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானை எனது வாழ்க்கையில் சந்தித்திருக்கவுமில்லை, எந்தவொரு பயங்கரவாத சம்பவத்துடனும் தொடர்புபடவில்லை. சம்பவம் நடைபெற்ற பின்னர் நானும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் கர்தினாலைச் சந்தித்து எமது கவலையைத் தெரிவித்திருந்தோம். இந்தப் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்து உச்ச தண்டனையை வழங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததுடன் அன்றிலிருந்து நான் உள்ளிட்ட எமது சமூகத்தினர் பயங்கரவாதத்துடன் தொடர்பானவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் வழங்கத் தொடங்கினோம்.

என்னுடன் உள்ள வைராக்கியம் காரணமாக எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களைக் கூறித்திரிகின்றனர். 52 நாட்கள் ஆட்சி மாற்றத்தில் என்னை தமது பக்கத்துக்கு வருமாறு அழைத்த உறுப்பினர்களே இப்போது இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ஊடகங்களில் என்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்கள் பொலிஸில் சென்று முறைப்பாடு செய்வார்கள் என எதிர்பார்த்திருந்தேன். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாக இருந்தால் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்திருக்கலாம். என்மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக நான் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸ்ஸாநாயக்க, விமல வீரவன்ச ஆகியோருக்கு எதிராகவே முறைப்பாடு செய்துள்ளேன். என்னைப் பற்றி அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வீடியோ சீடிக்களையும் வழங்கியுள்ளேன். சதோச வாகனங்களுக்கு ஜீ.பி.எஸ் பொருத்த நானே நடவடிக்கை எடுத்திருந்தேன். நாடு முழுவதிலும் 410 கிளைகள் இருப்பதால் 100ற்கும் அதிகமான வாகனங்கள் இருக்கின்றன. இவற்றை வினைத்திறனாக செயற்படுத்தும் நோக்கில் வாகனங்களுக்கு ஜீ.பி.எஸ் பொருத்த 2017இல் நடவடிக்கை எடுத்திருந்தேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிழையான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கவில்லை என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை