மத்திய கிழக்கு அமைதிக்கான பொருளாதார திட்டம் அறிமுகம்

பலஸ்தீனம் அதிருப்தி

இஸ்ரேல் – பலஸ்தீன அமைதி முயற்சிக்கான 50 பில்லியன் டொலர் பொருளாதாாரத் திட்டத்தை அமெரிக்க நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தது. பலஸ்தீனர்களுக்கான இந்த பெரும் தொகை முதலீடு பல தசாப்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னிபந்தனையாக இருப்பதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரின் மருமகனுமான ஜரெட் குஷ்னர் பஹ்ரைனில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டை திறந்து வைத்தார். எனினும் இந்த திட்டத்திற்கு அரபுலகில் பரந்த அளவில் எதிர்ப்பு வெளியாகியுள்ளதோடு அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சவூதி ஆரேபியாவும் இதற்கு ஆதரவு வெளியிட மறுத்துள்ளது.

“கடந்த கால மோதல்களால் பாதிக்கப்பட்ட இந்த பிராந்தியத்தை வர்த்தக முன்னேற்றம் கொண்ட பகுதியாக எம்மால் மாற்ற முடியும்” என்று குஷ்னர் மாநாட்டில் கூடியிருந்தவர்களிடம் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகத் வங்கித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

மேற்குக் கரையில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்தத்் திட்டத்தை கடுமையாக சாடினார்.

“பணம் முக்கியம். பொருளாதாரம் முக்கியம்... அரசியல் தீர்வு மிக மிக முக்கியம்” என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் அரசியல் தீர்வு பற்றிய விபரம் இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் அல்லது பலஸ்தீன அரச தரப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்காத நிலையில் பல அரபு நாடுகளும் தனது பிரதி அமைச்சர்களை அனுப்பி உள்ளன.

இந்த பொருளாதாரத் திட்டத்திற்கு செல்வந்த வளைகுடா அரபு நாடுகள் ஆதரவு வெளியிடும் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. இந்தத் திட்டத்தின்படி பலஸ்தீனத்தில் 50 பில்லியன் டொலர் முதலீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை