தமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்

இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லையாயின் அதற்காக நீதிமன்றம் செல்ல தேவையில்லை. பொலிஸ் நிலை யம் செல்ல தேவையில்லை. தமிழ் மக்கள் விரும்பாத இடங்களிலிருந்து புத்தர் சிலைகளை தாங்களே அகற்றுவோமென வண. அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

அத்துடன் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் பலமான ஓர் அமைப்பை உருவா க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ஆம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (14) இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கொழும்பில் சிங்கள மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கப்படவேண்டும். அதற்கான பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. மேலும் இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்கே இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் அதனை மக்கள் விரும்பாவிட்டால் அதனை நாங்கள் செய்யமாட்டோம். அதற்காக நீதிமன்றம் செல்ல தேவையில்லை, பொலிஸ் நிலையம் செல்ல தேவையில்லை. இந்து பௌத்த சமயங்களின் செய்தி அன்பு மட்டுமேயாகும். தலதா மாளிகை தாக்கப்பட்டபோது இந்து கோவில்களை பௌத்தர்கள் தாக்கவில்லை. 83 கலவரம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்து கோவில்களை தாக்கவில்லை. தாக்கவேண்டும் என நினைக்கவுமில்லை.

ஆனால் சவுதி, ஓமான், கட்டார் போன்ற நாடுகளில் பிள்ளையார் கோவிலை கட்ட முடியுமா? இலங்கையில் சகல மதங்களுக்கும் பூரணமான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.  உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள், விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் உயிரிழந்தனர். இதனை இஸ்லாமிய இனவாதிகளே செய்தார்கள். இதனை சொல்வதற்கு அச்சப்படவேண்டியதில்லை.

கிழக்கு மாகாணத்தில் அரபு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் 2016ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டபோது  அது தொழிநுட்ப பல்கலைகழகம் என குறிப்பிடப்பட்டது.  ஆனால் ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா, அரபு நாடுகளில் உள்ளதுபோல் கட்டியுள்ளார். இதற்கு நிதி யார் கொடுத்தார்கள்? என பார்த்தால்100 மில்லியனுக்கு மேல் சவுதியில் உள்ள மக்களிடமிருந்து பணத்தை பெற்று தனிப்பட்ட பல்கலைகழகமாக இயக்கிக் கொண்டிருக்கின்றார். இனவாதத்தை உருவாக்கவேண்டும் அல்லது தேவையற்ற விடயங்களை கற்பிப்பதற்கான பலகலைக்கழகமாகவே இது இருக்கின்றது. இவ்வாறான பல்கலைகழகத்திற்கு இந்துக்களும், பௌத்தர்களும் இடமளிக்ககூடாது.

தனிப்பட்டரீதியில் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தை மாற்ற முடியாவிட்டாலும் அரசுடமையாக மாற்றி தொழிநுட்ப  பல்கலைகழகமாக மாற்றப்படும். அதற்கான செயற்பாடுகளை நாங்கள் தொடர்ந்தும் எடுப்போம். மேலும் குருநாகல் வைத்தியசாலையில் சில முறைகேடான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

நாம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சென்றபோதும் அநேக தமிழ் தாய்மார் இவ்வாறான முறைப்பாட்டை கூறியள்ளார்கள்.  ஒரு பிள்ளை பெற்ற பின்னர் பிள்ளை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் அனேகமான பாடசாலைகளில் தமிழர்கள் ஆசிரியர்களாக காண முடியவில்லை.

விஞ்ஞான, கணித பாட அசிரியர்களாக 80 வீதமானவர்கள் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கல்வி அமைச்சு என்ன செய்துள்ளது?. இவ்வாறு கிழக்கில பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல நுாற்றுக்கணக்கான காணிகளை அபகரித்துள்ளார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பு இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துவதாக  தெரியவில்லை.

ஏற்றுமதி, இறக்குமதியில் முஸ்லிம்கள் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறானவர்கள் ஊடாக தமிழ் மக்கள் சூறையாடப்பட்டார்கள், சிங்கள மக்கள் சூறையாடப்பட்டார்கள். தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து இஸ்லாமிய இனவாதத்தை அழிக்க வேண்டும்.

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் பலமான அமைப்பை உருவாக்கவேண்டும். தமிழ் தரப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்த்து கொடுத்தபோதும் அவர்கள் வடக்கில் பிரச்சினை என்கிறார்களே தவிர அவர்கள் தீர்வைக் கொடுத்ததில்லை. பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளனர். அமைச்சுக்களில் நுழைந்துள்ளார்கள், கிழக்கு மாகாணத்தை அவர்கள் நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனை எவரும் கண்டு கொள்வதில்லை. சிங்களவர்களும், தமிழர்களும் நினைத்தால் சகல தகுதிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஹிஸ்புல்லா, அசாத்சாலி போன்றவர்களை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் வண. அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

(பருத்தித்துறை விசேட நிருபர்)

Sun, 06/16/2019 - 13:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை