பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் நீக்கம்

மின்சாரத்தை கொள்வனவு செய்தல்  

கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரங்கள் 

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கும் இலங்கை மின்சார சபைக்குமிடையில் இடம்பெறும் பனிப் போரினால் மின்சார சபை பெரும் நட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கும் அதிகாரத்தையும் அத்துடன் மின்சார கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அந்த ஆணைக் குழுவில் இருந்து நீக்கி அமைச்சுக்கு பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க 27ன் கீழ் 2ல் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  பொது பயன்பாட்டு ஆணைக்குழு தேவையில்லாத விதத்தில் மின்சார சபையின் செயற்பாடுகளில் தலையிட்டு வருகிறது.

இதனால் ஆணைக்குழுவுக்கும் மின்சார சபைக்கும் இடையில் நிலவும் பனிப்போரை நிவர்த்தி செய்வதற்கே நாம் முயற்சிக்கின்றோம். 

அதேவேளை ஒரு அலகு மின்சாரத்தை பதினேழு அல்லது பதினெட்டு ரூபாவுக்கு கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும்போது உற்பத்தி செலவு 72ரூபாவாக உள்ளது. இதனை ஓரளவாவது சரி செய்வது அவசியம் என்ற நோக்கிலேயே நாம் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

சபையில் இது தொடர்பில் சில நிமிடங்கள் சர்ச்சை நிலவியதுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். எதிர்க்கட்சியானது பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்தை அமைச்சரோ அல்லது அமைச்சரவைக்குப் பெற்றுக் கொள்ளும்போது மின்சாரத்துறையில் மேலும் மோசடிகள் இடம்பெற அது வழிவகுக்கும் என்றும் தொடர்ந்தும் தற்போதுள்ள அதிகாரம் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தனர்.

அனுர குமார திசாநாயக்க எம்பி, தமது கேள்வியின் போது மின்சாரசபை மின்சாரத்தை கொள்வனவு செய்யும்போது அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்கும் அதிகாரம் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் அதேவேளை மின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரமும் அந்த ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் அந்த அதிகாரத்தை குறித்த ஆணைக்குழுவிடம் இருந்து நீக்கி அதனை அமைச்சர் தக்கவைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறார் என்றும் இதனால் பெரும் நெருக்கடி நிலையை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்  

Fri, 06/28/2019 - 08:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை