சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியுமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.அவரை முன்கூட்டியே விடுவிக்கலாமென சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து நான்கு பேரும் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, நால்வரையும் விடுதலை செய்து பரபரப்புத் தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று அதிரடியாக தெரிவித்ததோடு, இந்த வழக்கில் மேன்முறையீடு செய்ய முடியாது என்றும் அறிவித்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிறையில் இரு வருடங்களைக் கழித்து விட்ட நிலையில் நன்னடத்தை காரணமாக சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கர்நாடக சிறைத்துறை பரிந்துரை செய்திருப்பதாக சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கர்நாடக சட்டத்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதாக பரிந்துரை வந்திருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.மேலும் சசிகலா விவகாரத்தில் நன்னடத்தை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனெனில் அவர் சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயண ராவுக்கு, சிறப்பு சலுகைகள் பெறுவதற்காக 2 கோடி ரூபா லஞ்சம் கொடுத்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டியிருந்தார். சசிகலாவுக்காக தனி சமையலறை, சிறப்பு அறைகள் போன்றவையும் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில், உயர்மட்ட குழுவை அரசு அமைத்தது. அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது உறுதி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, இப்படியான ஒரு விஷயம் இருக்கும் போது நன்னடத்தை அடிப்படையில் எப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும்?"

இவ்வாறு கேள்வி எழுப்பினார் அந்த அதிகாரி.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை அந்த அபராதத் தொகையை சசிகலா செலுத்தவில்லை. அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் கூடுதலாக 13 மாதங்கள் சசிகலா உள்ளிட்டோர் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என்பது தீர்ப்பின் சாராம்சம்.

நிலைமை இப்படி இருக்கும் போது, முன்கூட்டியே அவர் விடுதலை ஆவார் என்பது நடக்காத காரியம் என்கிறது கர்நாடக அரசு வட்டாரம்.

இதுகுறித்து கர்நாடக மேல்நீதிமன்ற வழக்கறிஞர் சத்யநாராயணா கூறுகையில், "சசிகலா உள்ளிட்டோர், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்றவர்களை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது இயலாத காரியம்" என்றார். எனவே, சசிகலா 4 ஆண்டுகளை சிறையில் கழிப்பது கட்டாயம் என்றே தெரிகிறது.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை