எப்.ஏ கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நோவா விளையாட்டுக் கழக அணி சம்பியன்

அகில இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் எப்ஏ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் 2019 ஆம் ஆண்டுக்கான சம்பியின் கிண்ணத்தை நோவா விளையாட்டுக் கழக அணி தனதாக்கிக் கொண்டது.

கிண்ணியா உதைபந்தாட்டச் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள விளையாட்டுக்கழகங்களின் ஏ , பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் இருந்து 22 உதைபந்தாட்ட அணிகள் இத் தொடரில் பங்குபற்றின.

கடந்த பத்து நாட்களாக அல் இர்பான் விளையாட்டு மைதானம் மற்றும் கிிண்ணியா எழிலரங்கு விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன

இந்தப் போட்டித் தொடரில் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிறு (16) கிண்ணியா எழிலரங்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் ஜீனியர்ஸ் விளையாட்டுக் கழக அணியும் நோவா விளையாட்டுக் கழக அணியும் இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டு, மோதிக் கொண்டன.

இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில், ஆட்டம் ஆரம்பித்து பதினெட்டாவது நிமிடத்தில் நோவா அணி கோல் ஒன்றை போட்டு, தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டது.

இருந்த போதும், இந்த சவாலை எதிர்த்து வேகமாக ஆடிய ஜீனியர்ஸ் விளையாட்டுக் கழக அணி ஆட்டத்தில்

25 வது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டு, போட்டியை சமநிலைப் படுத்திக் கொண்டது.

இடைவேளைக்கு முன்னர் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை மாத்திரம் பெற்றுக் கொண்ட நிலையில், இடைவேளைக்குப் பின்னரான ஆட்டம் ஆரம்பமானது.

இந்த நிலையில் இரண்டு அணிகளும் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொள்வதற்காக கடுமையான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஆட்டம் நிறைவு பெறுவதற்கு மூன்று நிமிடங்கள் இருக்கையில் நோவா அணி மற்றுமொரு கோலைப் போட்டு, தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது.

இதன் மூலம் 2 : 1 என்ற கோல் கணக்கில் நோவா அணி, ஜினியர்ஸ் அணியை தோற்கடித்து, 2019 ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.

இந்த போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்த இண்டு அணிகளும் அகில இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் தேசிய மட்ட போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த வைபவத்தில், கிண்ணியா உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சபீயுள்ளா, பொதுச் செயலாளர் எம்.சீ.எம்.றிஸ்வி, பொருளாளர் ஏ.எல். எம். நபீல் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்

கிண்ணியா மத்திய நிருபர்

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை