பர்வீஸ் மஹ்ரூப் வெஸ்லி கல்லூரி சார்பாக பங்கேற்ற முதலாமவர்

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியின் மூலம் முன்னணிக்கு வந்த மற்றொரு சிறப்பான வீரர் இலங்கை டெஸ்ட் அணியிலும் ஒருநாள் அணியிலும் சிறப்பாக விளையாடிய பர்வீஸ் மஹ்ரூப்.

2000 மாம் புதிய மிலேனிய ஆண்டில் திரித்துவ கல்லூரியின் கௌசல்ய வீரரட்ன ஒப்சேர்வர்- சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றதையடுத்து 2001 இல் சென் பீட்டர்ஸ் கல்லூரியின் கௌசல் லொக்குஆரச்சி அந்த விருதை வென்றார். 2002 இல் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சஹன் விஜேரட்ன விருதை வென்றார். அதனையடுத்து 2003 இல் முதல் முறையாக வெஸ்லி கல்லூரிக்காக விளையாடிய ஒரு வீரர் விருதை வென்றார். அவர்தான் பர்வீஸ் மஹ்ரூப்.

1984 செப்டம்பர் 7ஆம் திகதி பிறந்த பர்வீஸ் மஹ்ரூப் 2003 ஆம் ஆண்டு வெஸ்லி கல்லூரிக்காக சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாகவே அந்த வருடம் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை விருதை அவரால் வெல்ல முடிந்தது.

8 வயதாகும் போதே மஹ்ருப் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டார். கிரிக்கெட் மட்டுமன்றி கால் பந்தாட்டம் மற்றும் றக்பி ஆகிய விளையாட்டுக்களிலும் அவர் ஆர்வம் காட்டினார். 12வயதுக்கு பின்னர் அவர் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். முதலில் விக்கட் காப்பளராக விளையாட்டை ஆரம்பித்த மஹ்ரூப் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளின் போதே அவர் பந்து வீச்சாளராக தன்னை மாற்றிக்கொண்டார்.

மஹ்ரூபுக்கு 13 வயது நடந்த போது அவர் விளையாடிய அணியில் இருந்த 5 பந்து வீச்சாளர்களும் காய்ச்சல் காரணமாக விளையாட முடியாத நிலையில் மஹ்ரூப் அணிக்கு விளையாடியதுடன் பந்து வீசவும் அழைக்கப்பட்டார்.

அப்போதுதான் அதுவரை அவருக்குள் மறைந்திருநத திறமை வெளிப்பட்டது. அப்போட்டியில் அவர் மூன்று பந்துகளில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்ததுடன் மொத்தம் ஆறு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அதன் பின்னரே அவர் வேகப் பந்து வீச்சில் அக்கறை காட்டினார்.

அதனையடுத்து அவர் அனைத்து வயதுப் போட்டிகளிலும் வெஸ்லிக் கல்லூரிக்காக விளையாடினார். வெஸ்லிக் கல்லூரிக்காக அவர் ஒரு இன்னிங்ஸில் பெற்ற அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கை 243 ஆகும். அத்துடன் ஒரு இன்னிங்ஸில் 20 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக அமைந்தது.

2003 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்ற அடுத்த வருடமே இலங்கையின் 19 வயதுக்குட்டவர்களுக்கான உலகக் கிண்ண அணியில் தலைவராக மஹ்ரூப் இடம்பிடித்தார். அத்துடன் அதே ஆண்டு இலங்கை ஏ அணியிலும் அவருக்கு இடம்கிடைத்தது.

இலங்கை ஏ அணி, பாகிஸ்தான், இந்தியா ஆகியவற்றின் ஏ அணிகளுடன் இந்தியாவில் விளையாடப்பட்ட சுற்றுப்போட்டியில் மஹ்ருப் இலங்கை அணிக்காக விளையாடினார்.

அச்சுற்றுப் போட்டியில் மஹ்ரூப் சிறப்பாக விளையாடினார். 11.77 என்ற சராசரியுடன் அவர் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன் இலங்கை ஏ வென்ற இறுதியில் போட்டியில் சிறந்த ஆட்டக்காரராகவும் தெரிவானார். அதற்கு அடுத்த மாதம் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியின் தலைவராக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் விளையாடினார்.

அச்சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மஹ்ருப் 56 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றிபெற உதவினார். இதன்மூலம் அப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

2004 இல் சிம்பாப்வே சென்று ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய இலங்கை அணியில் மஹ்ரூப் விளையாடியிருந்தார்.

அத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மஹ்ரூப்பும் மற்றொரு வீரரும் இலங்கைக்காக அறிமுகம் பெற்றனர்.

மஹ்ரூப் அறிமுகமாகிய அந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி 35 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மஹ்ரூப் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி இரண்டு போட்டிகளிலும் விளையாடிய மஹ்ரூப் மொத்தம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்தத் தொடரிலேயே மஹ்ரூப்புக்கு டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமும் கிடைத்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய மஹ்ரூப் மொத்தம் 40 ஓட்டங்களையும் 4 விக்கெட்டுகனையும் பெற்றார்.

2008இல் ஐ. பி. எல். போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டபோது டெல்லி டெயார் டெவில்ஸ் அணி மஹ்ரூபை இரண்டரை இலட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்தது. முதலாவது ஐ. பி. எல். சுற்றுப்போட்டியில் மஹ்ரூப் 15 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். சுற்றுப்போட்டியில் அதிக விக்கெட்களை கைப்பற்றிவர்களில் 9ஆவது இடத்தில் மஹ்ரூப் கூட்டாக இடம்பெற்றார்.

6அடி 3 அங்குல உயரம் கொண்ட பர்வீஸ் மஹ்ரூப் இலங்கைக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 556 ஓட்டங்கள் பெற்றார். இதில் மூன்று அரைச்சதங்கள் அடங்கின. அதிக ஓட்டங்களாக 72 ஓட்டங்களைப் பெற்றதுடன் 25 விக்கெட்டுகளையும் மஹ்ருப் கைப்பற்றினார்.

9ஆம் இலக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மஹ்ருப் தனது அறிமுகப் போட்டியிலேயே 40 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கைக்காக மஹ்ருப் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்போட்டிகளில் மொத்தம் 1113 ஓட்டங்களைப் பெற்று அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள் பெற்றமையாகும்.

அவரது அறிமுக ஒருநாள் போட்டி ஹராரேயில் நடைபெற்ற சிம்பாப்வேக்கு எதிரான போட்டியாகும். இப்போட்டி 2004 ஏப்ரல் 25ஆம்திகதி நடைபெற்றது.

இப்பொட்டியில் பந்து வீசிய மஹ்ரூப் மூன்று ஓவர்கள் பந்து வீசினார். அதில் ஒரு ஓவர் ஓட்டம் எதுவும் எடுக்கப்படாத ஓவர். மூன்று ஓவர்களில் மூன்று ஓட்டங்களுககு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை சிறப்பம்சமாகும்.

இப்போட்டியில் சிம்பாப்வே 35 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்துவீச்சில் இலங்கை வீரர்களான சமிந்தவாஸ் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட், மஹ்ரூப் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட், தில்ஹார பெர்னாண்டோ 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற வகையில் சிறப்பாகப் பந்து வீசியிருந்தனர். இதனால் 18 ஓவர்கள்ல் சிம்பாப்வே அணியை சுருட்ட முடிந்தது.

2007 உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் மஹ்ரூப் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உலகக் கிண்ண அறிமுகத்திலேயே ஒரு போட்டியில் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதலாவது இலங்கை வீரர் பர்வீஸ் மஹ்ரூப்.

2007 அக்டோபர் 7ஆம் திகதி மஹ்ரூப் அவரது 75வது போட்டியில் 100 ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்த மைக்கல்லை வேகமாகத் தொட்ட இலங்கை பந்துவீச்சாளர் இவர்தான். இது முத்தையா முரளிதரனைவிட ஒரு போட்டி குறைவானதாகும். எனினும் பின்னர் இந்த சாதனை லசித் மாலிங்கவினால் முறியடிக்கப்பட்டது. மலிங்க 68 போட்டிகளில் 100 விக்கெட் பெற்றதே இப்போது இலங்கை சாதனையாகவுள்ளது.

மஹ்ரூப் தனது ஒருநாள் போட்டி ஹெட்ரிக்கை 2010 ஜூன் 22ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பெற்றுக்கொண்டார்.

ஒப்சேர்வர்- மொபிடெல் சிறப்பு பாடசாலை வீரருக்கான விருது வழங்கும் போட்டி இலங்கையின் பழைமையான தேசிய செய்திப்பத்திரிகையான சண்டே ஒப்சேர்வரின் ஏற்பாட்டில் மொபிடெல் அணுசரனையுடன் இடம்பெற்று வருவது, தொடர்ந்து 40 ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ள இந்த விருது வழங்கலின் 41ஆவது அங்கம் அடுத்த சில மாதங்களில் கோலாகலமாக இடம்பெற வுள்ளது.

Sat, 06/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை