பாராளுமன்றத்தை கலைத்து உடன் தேர்தல் நடத்தவேண்டும்

பொதுத் தேர்தல் வரை நீடித்திருக்கக் கூடிய ஆட்சியை தொடர்வதற்கு வாய்ப்பு இல்லையென்றால் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டமென ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மேலெழுந்திருப்பதானது எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்குமென்று உலக வங்கி எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய சம்பவங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளில், அபிப்பிராயங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைக்க வேண்டியது முதலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தேவையாக இருக்கின்றது. அது தனிக் கட்சி ஆட்சியாக, கூட்டுக் கட்சிகளின் ஆட்சியாக, ஓர் இடைக்கால ஆட்சியாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அடுத்த பொதுத் தேர்தல் வரையிலும் நீடித்து, நிலைக்கக்கூடிய பலமிக்கதொரு ஆட்சியாக இருக்க வேண்டும்.

அதற்கு வாய்ப்பு இல்லையேல், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, உடனடியாக பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். மக்கள் அளித்த ஆணை இன்னும் இருக்கின்றது. அது முடியும்வரை தொங்கிக் கொண்டிருப்போம் என்றெல்லாம் கதைகூறிக் கொண்டு இருக்க முடியாது என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை