பலஸ்தீனத்திற்கான அமெரிக்க பொருளாதார திட்டம் வெளியீடு

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்பின் திட்டம் குறித்து பஹ்ரைனில் அரபு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பலஸ்தீன பொருளாதாராத்தின் வேகமான வளர்ச்சிகான முன்மொழிவுகளைக் கொண்ட இரண்டு நாள் செயலமர்வு ஒன்றுக்காக அரச, சிவில் சமூக மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்கள் கொண்ட பஹ்ரைன் மாநாடு நேற்று ஆரம்பமானது. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகையால் இந்த முன்மொழிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் எதிர்வரும் 10 ஆண்டுகளில் பலஸ்தீனத்திற்கு 50 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொருளாதார திட்டத்தில் 10 ஆண்டுகளுக்குள் பலஸ்தீன உள்நாட்டு உற்பத்திகளை இரட்டிப்பாக்கி ஒரு மில்லியன் தொழில் வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலையில்லாதோர் எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்திற்கு குறைத்து வறுமையை 50 வீதத்திற்கு குறைக்கவும் அமெரிக்க திட்டத்தில் உள்ளது. எனினும் இந்தத் திட்டத்தை பலஸ்தீன தலைவர்கள் நிராகரித்திருப்பதோடு பஹ்ரைன் மாநாட்டிலும் பங்கேற்பதில்லை என குறிப்பிட்டுள்ளது. என்ன செய்வதென்றாலும் அதற்கு முன்னர் அரசியல் தீர்வொன்று எட்டப்பட்டிருக்க வேண்டும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தார். உலகில் இருக்கும் அனைத்து செல்வங்களும் தரப்பட்டாலும் பலஸ்தீன் தனது உரிமையை விற்காது என்று காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இஸ்ரேல் இந்தத் திட்டங்கள் குறித்து சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை அடுத்து கடந்த 2017 கடைசிப் பகுதியில் அமெரிக்காவுடனான இராஜதந்திர தொடர்புகளை மேற்குக் கரை பகுதியில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன அதிகார சபை கைவிட்டது. அது தொடக்கம் பலஸ்தீனத்திற்கான தனது நிதிகளை முடக்கிய அமெரிக்கா, பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்திற்கு வழங்கிய பங்களிப்பையும் நிறுத்திக் கொண்டது. தனது தீர்வுத் திட்டத்தின் அரசியல் அங்கங்களை வரும் நவம்பர் வரை டிரம்ப் வெளியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாதத்தில் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்காவின் அமைதித் திட்டம் “இரு நாடுகள் தீர்வு” அடிப்படையை கொண்டிராது என்று கருத்துகள் வெளியானதை அடுத்து பலஸ்தீனம் அதற்கு ஆத்திரத்தை வெளியிட்டிருந்தது. மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய 1967 யுத்த நிறுத்தத்திற்கு முந்திய எல்லைகளைக் கொண்ட சுதந்திர பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவது குறித்து பலஸ்தீன நிர்வாகத் வலியுறுத்தி வருகிறது.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை