மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த ஐ.தே.க எதிர்ப்பு

நாட்டில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடுமெனவும் அக்கட்சி எச்சரிக்கை விடுத்தது.

அரசியலில் நிர்க்கதியாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவா அல்லது அவரது பதவிக்காலத்தை இன்னும் 5,6 மாதங்கள் நீடித்துக்கொள்ளவா இவ்வாறு செயற்படுகின்றாரென விளக்கமளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அவருக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ அல்லது அமைச்சரவைக்கோ அறிவிக்காது மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்.

என்றாலும், நாட்டில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைக்கு கொண்டுவருவதை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. அவசர அவசரமாக மரண தண்டனையை நிறைவேற்ற ஏன் ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளாரென தெரியவில்லை.

போதைப்பொருள் கடத்த மற்றும் விற்பனை ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மரண தண்டனை மாத்திரம் அதற்கு தீர்வல்ல. சர்வதேச நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இது நாட்டுக்கு பாரதூரமானது. ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு என்னவென தெளிவுப்படுத்த வேண்டும். அரசியலில் நிர்க்கதியாகியுள்ள சு.கவின் செல்வாக்கை உயர்த்தவா அல்லது ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ள செயற்படும் தயாசிறி போன்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை