மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேற்றம்

உலக  கிண்ணம்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியினை 125 ஓட்டங்களால் தோற்கடித்தது.

மன்செஸ்டர் நகரில் (27) ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார்.

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் தோல்விகள் எதனையும் பெறாத இந்திய அணி, தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியினை பதிவு செய்திருந்தது. அந்தவகையில், இந்திய அணி அதே உற்சாகத்துடன் இப்போட்டியில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் களமிறங்கியிருந்தது.

மறுமுனையில் தமது கடைசி மோதலில் நியூசிலாந்துடன் தோல்வியினை தழுவிய மேற்கிந்திய தீவுகள் அணி, தமது உலகக் கிண்ண அரையிறுதிச்சுற்று வாய்ப்பினை தக்கவைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணியில் எவின் லூயிஸ் மற்றும் ஆஷ்லி நேர்ஸ் ஆகியோருக்கு பதிலாக சுனில் அம்பிரிஸ் மற்றும் பேபியன் அலன் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து நாணயச் சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த ரோஹித் சர்மா, 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார்.

எனினும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல், 6 பெளண்டரிகள் உடன் 48 ஓட்டங்கள் பெற்று இந்திய அணிக்கு உதவினார். ராகுலுடன், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக பெற்றுக் கொண்ட அரைச்சதத்துடன் இந்திய அணிக்கு வலுச்சேர்த்தார். மொத்தமாக 82 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோஹ்லி, 8 பெளண்டரிகள் உடன் 72 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தோடு, இந்த 72 ஓட்டங்களுக்குள் கோலியின் 53ஆவது ஒருநாள் அரைச்சதமும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மஹேந்திர சிங் டோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பெறுமதிமிக்க ஓட்டங்களுடன் இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மஹேந்திர சிங் டோனி, ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 72ஆவது அரைச்சதத்தோடு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றார். இதேநேரம் ஹர்திக் பாண்ட்யா 38 பந்துகளில் 5 பெளண்டரிகள் விளாசி 46 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் கேமர் ரோச் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், செல்டோன் கொட்ரல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 269 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, மொஹமட் ஷமியின் அதிரடி வேகத்தினால் 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 143 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சுனில் அம்பிரிஸ் 31 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்திருந்தார். இதேநேரம், அம்பிரிஸ் தவிர மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் நிகோலஸ் பூரான் மாத்திரமே இருபது (28) ஓட்டங்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் ஷமி 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவானார்.

இப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் 7 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றியுடன் 3 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகாமல் வெளியேறுகின்றது.

அத்தோடு மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளை தொடர்ந்து இந்த உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் மூன்றாவது அணியாகவும் மாறியிருக்கின்றது.

உலகக் கிண்ண அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகாத மேற்கிந்திய தீவுகள் அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இலங்கை அணியினை ஜூலை மாதம் 01ஆம் திகதி செஸ்டர்-லே-ஸ்டிரீட் நகரில் சந்திக்கின்றது.

இதேநேரம் இப்போட்டி வெற்றியோடு இந்த உலகக் கிண்ணத் தொடரில் 11 புள்ளிகளுடன் தமது அரையிறுதி சுற்று வாய்ப்பினை அதிகரித்துள்ள இந்திய அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இங்கிலாந்து அணியினை நாளை ஞாயிற்றுக்கிழமை (30) பர்மிங்ஹம் நகரில் எதிர்கொள்கின்றது.

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை