ஆர்ப்பாட்டம் வலுத்ததால் ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டம் தாமதம்

ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச தலைமையகம் மற்றும் சட்டமன்றத்தை முடக்கியதை அடுத்து சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் ஒன்றின் விவாதம் நேற்று பிற்போடப்பட்டுள்ளது.

கறுப்பு மேற்சட்டை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தலைக்கவசம் மற்றும் கண்ணாடிக் கவசத்துடன் இருந்த பொலிஸாருக்கும் இடையில் சட்டமன்ற கெளன்ஸிலுக்கு வெளியில் நேற்று இழுபறி ஏற்பட்டது. இந்த சட்டமூலம் நகரின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக குற்றம்சாட்டி அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சட்டமன்றக் கட்டிடத்தை நேற்றுக் காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்டனர். நகரின் மையத்தில் இருக்கும் அந்தக் கட்டிடத்தை ஒட்டி கலகம் அடக்கு பொலிஸாரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.

வரும் 20 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விட எதிர்பார்க்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டமூலத்தின் மீது 60 மணிநேர விவாதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட சில குற்றச்செயல்களோடு தொடர்புடைய சந்தேகநபர்களை, சீனாவுக்கு அனுப்பி விசாரிக்கும் புதிய சட்டமூலத்தையே பலரும் எதிர்த்து வருகின்றனர்.

எனினும் இந்த சட்டமூலத்தின் விவாதம் பிந்திய நேரத்தில் முன்னெடுக்கப்படும் என்று சீன ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கட்டிடத்தின் பிரதான வாகன நுழைவாயிலுக்கு அருகில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்கள் எழுப்பியதோடு அவர்களுக்கு எதிராக பொலிஸார் மிளகுப் பொடி தெளித்து கலைத்தனர்.

ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம்மின் அலுவலத்தைச் சுற்றியுள்ள வீதிகளை ஆயிரக்கணக்கானோர் மறித்துக்கொண்ட காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய வேண்டாமென, கலகமடக்கும் படையினார் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்தனர்.

ஆசிய நிதி மையத்தின் முக்கியப் பகுதியில் போக்குவரத்தை நிறுத்த, சிலர் தடுப்புகளைப் போட்டனர். அந்தக் காட்சிகள், 2014ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தை நினைவூட்டின. இது அமைதியான ஒன்றுகூடலுக்கு அப்பால் அத்துமீறிவிட்டதாக ஹொங்கொங் பொலிஸ் படை நேற்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

“முடியுமான விரைவில் (ஆர்ப்பாட்டக்காரர்களை) வெளியேறும்படி நாம் அழைப்பு விடுக்கிறோம். இல்லாவிட்டால் நாம் படைப்பிரயோகத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும்” என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டத்தை நீக்கிக்கொள்ளும் வரை கலைந்து செல்லப்போவதில்லை என்று இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளனர்.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை