சவூதி விமான நிலையத்தின் மீது ஹூத்திக்கள் ஏவுகணை தாக்குதல்

26 பேருக்கு காயம்

யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை ஒன்று தென்மேற்கு சவூதி அரேபியாவில் விழுந்து 26 பொதுமக்கள் காயமடைந்ததாக அந்தக் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வரும் சவூதி கூட்டுப்படை குறிப்பிட்டுள்ளது.

அபா விமானநிலையத்தில் நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த எட்டுப் பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய 18 பேரும் முதலுதவிகளை பெற்ற பின் மருத்துவமனையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் காயமடைந்திருப்பதாக கூட்டுப்படையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சவூதி மலைப்பிரதேச நகரின் விமானநிலையத்தில் தாக்குதல் நடத்தியதாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் முன்னதாக பொறுப்பேற்றிருந்தனர்.

சவூதியில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களும் இலக்கு வைக்கப்படும் என்றும் எதிர்வரும் நாட்களில் அது வெளிச்சத்திற்கு வரும் என்றும் ஹூத்தி இராணுவ பேச்சாளர் ஒருவர் இந்த வார ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அடையாளம் காணப்படாத ஏவுகணை ஒன்றின் மூலமே தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக சவூதி கூட்டுப்படை குறிப்பிட்டபோதும் குரூஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹுத்திக்களின் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஹுத்திக்கள் குரூஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது இது இரண்டாது முறை என அந்தக் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் அல் மிசிராஹ் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் 2017 டிசம்பரில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபூதாபியில் அணு மின்சார நிலையம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானங்கள் இரண்டை இடைமறித்ததாக சவூதி குறிப்பிட்டு அடுத்த தினத்திலேயே இந்ததத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் யெமனில் மேற்கின் பெரும்பகுதியை கைப்பற்றி அந்நாட்டு ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி வெளிநாட்டுக்கு தப்பியோடியதை அடுத்து அந்நாட்டு உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்தது.

ஹூத்திக்களுடனான நான்கு ஆண்டு யுத்தத்தில் சவூதி தலைமையிலான கூட்டுப்படை யெமன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டு வருகிறது.

இந்த மோதல்களில் குறைந்தது 7000 பேர் கொல்லப்பட்டியருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது. இதில் 65 வீதமான உயிரிழப்புகள் சவூதி தலைமையிலான வான் வாக்குதல்களால் இடம்பெற்றதாகும்.

 

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை