கடல் சீற்றம்

பாரிய அலைகள் உருவாகுமென  மீனவர்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக கடலில் பாரிய அலைகள் உருவாக வாய்ப்பிருப்பதனால் இன்று (6) காலை 11 மணிவரை கடற்படையினரையும் பொதுமக்களையும் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு, மன்னார், காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலில் மணிக்கு 60 தொடக்கம் 65 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசுவதுடன் 03 தொடக்கம் 04 மீற்றர் உயரத்துக்கு

பாரிய அலைகள் உருவாகுமென்றும் வானிலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்படி கற்பிட்டி, சிலாபம்,கொழும்பு,பாணந்துறை, பேருவளை,அம்பலாங்கொடை,காலி,மிரிஸ்ஸ, ஹிக்கடுவை,தங்காலை மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களிலுள்ள கடலிலேயே இவ்வாறு பாரிய அலைகள் உருவாவதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசந்துறை, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வாழைச்சேனை, மட்டக்களப்பு, பொத்துவில், கிரிந்த, ஹம்பாந்தோட்டை பிரதேச கடலிலும் 0.5 தொடக்கம் 1.25 மீற்றர் வரையான அலைகள் எழுவதற்கான வாய்ப்பிருப்பதனால் மீனவர்களும் கடற்படையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கையைச் சூழவுள்ள கடற்பிரதேசம் முழுவதும் கடுங்காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை