அரச இயந்திரத்தை அரச தலைவரே செயலிழக்க செய்ய அனுமதிக்க முடியாது

அரச இயந்திரத்தை அரச தலைவராலேயே செயலிழக்க செய்ய அனுமதியளிக்க முடியாது. பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை புறக்கணிப்பது அரசியலமைப்புக்கு முரணானதும் தான்தோன்றித்தனமானதுமாகும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தணிப்பது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரின் பொறுப்பாகும். மூவரும் இது குறித்து கலந்துரையாடி அடுத்தவாரம் அமைச்சரவையைக் கூட்டி நாட்டை

சாதாரண நிலைக்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கட்சி பேதங்கள் கடந்து பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பாதுகாக்கவும் அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதியின் தணிப்பட்டசெயற்பாட்டுக்கு எதிராக அணிதிரள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஜனாதிபதியால் மீண்டுமொருமுறை அரசியலமைப்பும், அரச இயந்திரமும் நெருக்கடிக்கும், சவாலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கும், அரசுக்குமிடையில் அரசியலமைப்பு, சட்டவாக்கம், அரசியல் குறித்த மோதல்கள் ஏற்பட ஜனாதிபதி மீண்டும் வழிசமைத்துள்ளார். அதற்கான காரணமாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் மூலம் புலனாய்வுத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதாக விளக்கமளிக்கப் பட்டுள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தி அமைச்சரவைக் கூட்டத்தை இடைநிறுத்தியுள்ளார். நிறைவேற்று மற்றும் அரச இயந்திரத்தை செயற்படுத்தும் பொறுப்பிலிருந்து அவர் விலகியுள்ளார். எமது அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரத்துக்குள்ள அதிகாரங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்குள்ள அதிகாரங்கள் எவையென தெளிவாக அர்த்தமயப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறைக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பில் முரண்பாடுகளும், சந்தேகங்களும் நிலவின.

ஆனால், கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் போது மேன்முறையீட்டு நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் 19ஆவது திருத்தச்சட்டத்தில் நிறைவேற்று மற்றும் சட்டவாக்கத்துறைக்கு இடையிலான வேறுபாடுகள் எவையென தெளிவு படுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது. ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாதென பல சரத்துகள் தெளிவாக விளக்கமளிக்கின்றன.

எமது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிதான் அரச தலைவர். அரசாங்கத்தினமும், அமைச்சரவையினதும், நிறைவேற்றுத் துறையினதும் தலைவரும் அவரே. ஆகவே, அரச இயந்திரத்தை தொடர்ச்சியாக செயற்படுத்துவது ஜனாதிபதியின் பொறுப்பும் கடமையுமாகும்.

நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த அமைச்சரவையில் 51 அமைச்சரவைப் பத்திரங்களும், புதிய பத்திரங்கள் 19 என மொத்தமாக 70 அமைச்சரவைப் பத்திரங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்படவிருந்தன. அதேபோன்று அமைச்சரவை உப குழுக்கள் முன்வைத்துள்ள 34 பத்திரங்கள் என மொத்தமாக 104 அமைச்சரவைப் பத்திரங்கள் நிலுவையாகியுள்ளன.

வேண்டுமென்றே தான்தோன்றித்தனமாக அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்துவதால் அரச இயந்திரம் செயலழிந்துள்ளது. அரசமைப்பை மீண்டும் மீறியுள்ள ஜனாதிபதி, பாராளுமன்றத்தையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவென்பது பாராளுமன்றத் தலைவர்களால் பாராளுமன்றதில் நியமிக்கப்படுவது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கமைய அதனை மாற்றியமைக்க முடியாது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் இருந்தால் அவை தொடர்பில் கலந்துரையாடலாம். ஆகவே, இந்த நெருக்கடியை தொடர்ந்து கொண்டு சென்றால் அபாயமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஓக்டோர் 26 ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் நாட்டுக்கு அகௌரவம் ஏற்பட்டதுடன், பாரிய பொருளாதார இழப்புகளையும் சந்தித்தோம். ஜனநாயக ரீதியாக தெரிவான அரசுடன் தேசிய பாதுகாப்புச் சபை இணைந்து செயற்படாமையால் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு முகங்கொடுத்தோம். அதனால் நாட்டின் தேசியப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வும் பாதிப்புக்கு உள்ளானது. தற்போதைய நிலையும் அவ்வாறானதொரு நாசகரமான நிலையை நோக்கி தள்ளிவிடும். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் எமது நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம் பெற்றிருந்தன.

பாராளுமன்றத்திலும் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்ட முடியாதவாறு கலவரங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சரவை கூட்டப்படாமல் இருக்கவில்லை. எந்தவொரு பிரச்சினையும் இல்லாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியால் அமைச்சரவைக் கூட்டப் படாதுள்ளமை அரசியலமைப்பை தான்தோன்றித்தனமாக மீறும் செயற்பாடாகும்.

ஆகவே, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பாரிய பொறுப்புள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவை வழிநடத்துவது குறித்து பிரதமருக்கும், சபாநாயகருக்கும் பொறுப்புள்ளது. அனைவரும் இதுதொடர்பில் கலந்துரையாடி அடுத்தவாரம் அமைச்சரவையைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சி பேதங்கள் கடந்து பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பாதுகாக்கவும் அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதியின் தணிப்பட்டசெயற்பாட்டுக்கு எதிராகவும் அணிதிரள வேண்டும் என்றார்.

 

Thu, 06/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக