சந்தேகத்தில் கைதானோர் கட்டம் கட்டமாக விடுதலை; முஸ்லிம் எம்.பிக்களிடம் பிரதமர் உறுதி

ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதலையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 450சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முற்றுப் பெறும் நிலையில் உள்ளதாகவும் அவர்களை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் மாலை தம்மைச் சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற ஆளும்தரப்பு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்  வலியுறுத்தியிருந்தார். 

இதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்ட மாஅதிபருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். இந்த நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  நேற்று முன்தினம் மாலை அலரிமாளிகையில் பிரதமருடன் விசேட சந்திப்பில் ஈடுபட்டனர். இதன் போது சட்ட மாஅதிபரும் உடனிருந்தார். 

குண்டுத் தாக்குதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை காரணமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரில் சுமார் 450பேர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட முக்கிய சந்தேக நபர் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டோரின் விசாரணைகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் அதன் பிரகாரம் அடுத்தடுத்த நாட்களுக்குள் இவர்களில் பெரும்பாலானோரை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்திருப்பதாக அலரிமாளிகை வட்டாரம் தெரிவித்தது.

(எம்.ஏ.எம். நிலாம்) 

Thu, 06/20/2019 - 09:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை