மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு அங்கஜன் எம்.பி விஜயம்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சனிக்கிழமை (22) நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் மட்டக்களப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதத் தலைவர்களையும் அவர் சென்று பார்வையிடவுள்ளார். மேலும் அவருடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பிலும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் நேற்று வரை தொடர்கிறது. இந்நிலையில் போராட்டக்களத்திற்கு அங்கஜன் எம்.பி நேரில் சென்று ஆதரவு வழங்கியிருந்தார்.

கல்முனையில் சர்வ மதத்தலைவர்கள் முன்னெடுத்திருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் கடந்த திங்கட்கிழமை (16) முதல் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், கல்முனையில் ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று தற்காலிகமாக கைவிடப்பட்டதையடுத்து, தற்போது அங்கு சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து மட்டக்களப்பிலும் போராட்ட வடிவம் மாற்றப்பட்டு சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக தொடருகின்றது.

ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் உரிமையினை பறிக்கும் வகையிலான செயற்பாடுகள் கல்முனையில் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்தோடு, கல்முனை பிரதேச செயலகம் உடனடியாக தரமுயர்த்தப்படவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-)

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை