தண்ணீரின்றி தவிக்கும் தமிழ்நாடு

வரலாறு காணாத வரட்சி

தண்ணீர் இன்றி தவிக்கிறது தமிழகம். அதிலும் சென்னையின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அங்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் பலர் குடியிருப்புகளை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் வேறு இடங்களை நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள். இந்தியாவின் 6வது பெரிய நகரமான சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுத்தமாக தண்ணீர் இல்லை என்பதை உலகமே இப்போது சொல்லத் தொடங்கி உள்ளது. பருவமழை தமிழகத்தில் பொய்த்து விட்டது. மைலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மந்தைவெளி உட்பட தென்சென்னை பகுதி தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது.

மழைநீர் சேகரிப்பை உணராமல் அதிக ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டி, அதில் உறிஞ்சி உறிஞ்சி வாழ்ந்த மக்கள் இப்போது தண்ணீர் இல்லாததால் என்ன செய்வதுஎன்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வரண்டு விளையாட்டு மைதானங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் வீதிகள் தோறும் தண்ணீருக்காக கவலை தோய்ந்த முகத்துடன் காலிக் குடங்களுடன் அலைகிறார்கள்.

மிகப் பெரிய அளவில் வணிக நகரமாகி விட்ட சென்னையில் பல ஆயிரம் மக்கள் தினமும் வந்து செல்லும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பல ஆயிரம் மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இதேபோல் பல்லாயிரம் பேர் வேலை செய்யும் இலட்சக்கணக்கான நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.இங்குள்ள மக்கள் தண்ணீருக்காகத் தவிக்கின்றனர்.

தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள குடியிருப்புகளை விட்டு மக்கள் வேறு இடங்களை நோக்கி குடிபெயர்ந்து வருகிறார்கள். இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடியிருந்த பலர் தண்ணீர் இல்லாததால் சொந்த ஊர்களுக்கே சென்று விட்டார்கள்.தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெரும்பாலான கழிவறைகள் நேற்றுமுன்தினம் மூடப்பட்டன. இதனால் நோயாளிகள் மிகவும் அவதி அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பலர் கழிவறைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். சில பெண் கழிப்பறைகள் மட்டுமே திறந்து இருந்ததால் சிறுநீர் பரிசோதனை செய்யா முடியாமல் ஆண் நோயாளிகள் அவதிப்பட்டதைக் காண முடிந்தது.

பருவ மழை பொய்த்து போனதால் மொத்த தமிழகமும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரிந்தாடுகிறது. மக்கள் தண்ணீர் இல்லாமல் தங்களது அன்றாட அடிப்படை விஷயங்களை கூட மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வரலாறு காணாத வரட்சியில் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மக்கள் குடங்களுடன் அலைகின்றனர். இன்றைய வரட்சிக்கு மக்கள்தான் முழுப் பொறுப்பும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீர் நிலைகளை காக்கத் தவறியது, பெருமழை பெய்தபோது அதை சேமித்து வைக்கத் தவறியது, மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை முற்றிலும் மறந்து போனது என பல காரணங்களை நிபுணர்கள் அடுக்குகின்றனர்.இதையெல்லாம் செய்யத் தவறியது மக்கள் என்றால், இதை திட்டமிட்டு அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசும் அந்தக் கடமையிலிருந்து தவறி விட்டதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அரசும், மக்களும் முழுமையாக செயல்பட்டிருந்தால், விழிப்புணர்வுடன் இருந்திருந்தால், நிச்சயம் இந்த வரட்சியை ஓரளவு தடுத்திருக்க முடியும். இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டி வந்திருக்காது என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. அனைவருமே தங்களது கடமையிலிருந்து தவறி விட்டதால்தான் இந்த அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

மழை நீர் சேமிப்பு என்பது இன்று நேற்று வந்தது அல்ல. காலம் காலமாக நமது முன்னோர்கள் இதைக் கடைப்பிடித்து வந்தனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கடந்த 2001ம் ஆண்டு அதை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவிட்டார், அதை தீவிரமாக கண்காணிக்கவும் செய்தார். சட்டத் திருத்தமே கூட கொண்டு வந்தார். நாடு முழுவதும் இது போல சட்டம் கொண்டு வந்து மழைநீர் சேகரிப்பை அமுல்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான்.

அப்படி சட்டபூர்வமாக இதை மாற்றிய முதல் மாநிலம் இன்று வரட்சியால் தவிக்கிறது, தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாகவும்,வேதனையாகவும் இருக்கிறது.

"ஏரிகளைக் காலி செய்து விட்டோம். பெருமழை பெய்தால் அதை சேகரித்து வைக்க வழி இல்லை. மழைநீர் கால்வாய்கள் சரிவர இல்லை. ஏரிகளை முழுமையாக ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டிக் குவித்துள்ளோம். ஜெயலலிதா கடுமையாக போராடி அமுல்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக மறந்து விட்டோம். பிறகு இப்படித்தான் கஷ்டப்பட நேரிடும்" என்கின்றனர் நிபுணர்கள்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடிதண்ணீர் பிரச்சினை காரணமாக சென்னையில் சாதாரண கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை அனைத்தும் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காலத்தின் கொடுமை.

தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் மூடப்படுவதால் அங்கு சாப்பிட்டு வந்தவர்கள் வேறு வழியில்லாமல் தள்ளுவண்டிகளில் விற்கப்பட்டு வரும் கம்மங்கூழ், கேப்பை கூழ் என எளிய உணவுப் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சென்னையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். காரணம் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்துமே ஆண்டுக்கு குறைந்த பட்சம் 9 மாதங்களாவது நீரால் நிரம்பி வழியும். இதன் காரணமாகவே செங்கல்பட்டு மாவட்டத்தை ஏரிகளின் மாவட்டம் என்று சொல்லப்பட்ட வரலாறு உண்டு.இந்த மூன்று மாவட்டங்களில் அன்றைக்கு இருந்த ஆயிரக்கணக்கான ஏரிகள் எல்லாம் இன்றைக்கு காணாமல் போய்விட்டன. மூதாதையர்களான பல்லவ மன்னர்கள் காலத்தில் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் என்றே உருவாக்கப்பட்டவை அவை.

என்றைக்கு தகவல் தொழில்நுட்பம் என்ற அசுரம் சென்னையில் காலடி எடுத்து வைத்தானோ அன்றிலிருந்தே சென்னைக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் போதாத காலம் ஆரம்பமாகி விட்டது. நம்மால்தான் ஒன்றை உருவாக்கத் தெரியாது. குறைந்தபட்சம் நம் மூதாதையர்கள் உருவாக்கி வைத்ததையாவது பாதுகாக்கலாமே என்ற குறைந்தபட்ச அறிவு கூட நம்முடைய மூளைக்கு எட்டாமல் போனதுதான் வேதனை என்கிறார்கள் பெரியவர்கள்.

பெருநகரமயமாக்கல் என்ற பெயரில்,ஏரிகளை எல்லாம் அழித்தும் ஏரிகளுக்கு நீர் வரும் வழித்தடங்களை அழித்து சுடுகாடாக்கியும், அதன் மேல் ​ெகான்கிரீட் காடுகளை உருவாக்கி அதில் சுகமாக இருப்பதாக ஆரம்பத்தில் நினைத்தனர் மக்கள்.ஆனால் இப்போதுதான் விளைவு தெரிகிறது. அதற்கு முக்கியமாக சாம்பாருக்கும், ரசம் மற்றும் மோர் குழம்பு என அனைத்திற்கும் தண்ணீர் அவசியமாகிறது.

காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மழையும் கைவிட்டு விட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் கடும் சிக்கலை சந்திக்க நேர்ந்துள்ளது.

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை