ஆஸி அணிக்கு எதிரான தோல்வி பெரும் ஏமாற்றம்

-தலைவர் ஜேசன் ஹோல்டர்

ஆஸி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்று வெறும் 15 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், தோல்வி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர்,

”இந்த தோல்வியானது மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. எமக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். உண்மையில் தோல்வி குறித்து கவலையடைகிறேன்.

நாங்கள் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆனால், ஒருசில பொறுப்பற்ற துடுப்பாட்ட பிரயோகங்களால் தேவையான ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. ஆனாலும் நிறைய சாதகமான விடயங்களை இந்தப் போட்டியின் மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தது” என்றார்.

இந்தப் போட்டியின் மிகப் பெரிய தருணம் எது என கேட்டதற்கு, ”நெதன் கோல்டர் நைல் 60 ஓட்டங்களுடன் மேலதிமாக 30 ஓட்டங்களை அவ்வணிக்கு பெற்றுக் கொடுத்த போது அவருடைய விக்கெட்டை நாம் தவறவிட்டோம். இதுதான் போட்டியின் போக்கை மாற்றிய முக்கிய தருணமாக அமைந்தது.

எமது வீரர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தார்கள். இதனால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தோம். எனினும், பிற்பாதியில் நாங்கள் எதிர்பார்த்தளவு விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. எனவே, எமது ஆக்ரோஷமான விளையாட்டை போட்டியின் இறுதிவரை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

சவாலான இலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள், எதிர்பார்த்த அளவு நம்பிக்கை கொடுக்கவில்லை என்று அணியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

”நாங்கள் அவுஸ்திரேலியாவை 280 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தோம். ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்று அந்த ஓட்ட இலக்கை துரத்தியடித்திருக்க வேண்டும். எமது துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை.

இன்னும் நாங்கள் இப்போட்டித் தொடரின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம். நாங்கள் கூடுதல் அவதானம் செலுத்தி விளையாட வேண்டும். எதிரணி பின்னடைவை சந்திக்கும் போது அந்த அணியை அதே நிலையில் வைத்திருக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

இந்தப் போட்டியை நாங்கள் எமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தல் எமக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். எனினும், இதுதான் விளையாட்டு. அனைவரும் இன்னும் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்த தோல்வியில் இருந்து எமது வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மறுபுறத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். அதிலும் பழைய பந்தினால் அவர்கள் நெருக்கடி கொடுத்திருந்தனர். எனவே, அனைத்து கெளரவமும் அவர்களைச் சாரும் என அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இப்போட்டியில், நடுவர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு கொடுத்த பல தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அதிலும் குறிப்பாக அந்த அணியின் ஐந்து டி.ஆர்.எஸ் கோரிக்கைகள் மறுக்கப்பட்டன.

இதுதொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஹோல்டர் கருத்து தெரிவிக்கையில், உண்மையில் நடுவர்கள் இந்தப் போட்டியில் நிறைய தவறான முடிவுகளை வழங்கியிருந்தனர். இந்த முடிவுகள் எமக்கு கேலியாக இருந்தது.

அதிலும் குறிப்பாக கிறிஸ் கெய்லின் நோ–போல் பந்தை அறிவிக்காததை தொலைக்காட்சியில் பார்த்த போது நான் சிரித்தேன் என அவர் குறிப்பிட்டார். நடைபெற்ற போட்டிகளின் நிறைவில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தமது 3ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை நாளை 10ஆம் திகதி சந்திக்கிறது.

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை