திருத்தப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரசாங்க ஊழியர்களுக்கான ஆடை தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்து பொது நிருவாக, கிராமிய பொருளாதார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏற்கனவே வெளியிட்ட சுற்று நிருபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட சுற்றுநிருபத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய சுற்று நிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாணச் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுற்று நிருபத்தில் பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் ஜே..கே. ரத்னசிறி கையொப்பமிட்டுள்ளார்.

ஏற்கனவே உள்ள சுற்று நிருபத்தில் அரசு ஊழியர்களின் ஆடை தொடர்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் முதலாவது, நான்காவது ஒழுங்கு விதிகளிலே திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி முதலாவது விதிமுறையில் அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொருத்தமான ஒழுக்கமான ஆடையை அணிந்திருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ஊழியர்களின் முகம் முழுமையாக தெரியக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் பணிக்கப்பட்டிருக்கும் விதிமுறை களை  பாதிக்காத வகையில் ஆடை அமைந்திருத்தல் வேண்டும்.

நான்காவது ஒழுங்கு விதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது..

ஏதேனும் மதச் சம்பிரதாயங்களுக்கு உட்பட்ட தமது ஆடைகளைத் தயாரித்து கொண்டுள்ள அதிகாரி ஒருவர் இருந்தால், அவருக்கு முதலாவது விதியின்படி ஆடையை அணிந்திருப்பதோடு தமது மத அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அதிகாரிகளுக்கு முழுமையாக முகத்தை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் மேலதிகமாக ஓர் ஆடையை பயன்படுத்த முடியும்.

ஆடை தொடர்பான இந்தப் புதிய திருத்தப்பட்ட சுற்று நிருபம் உடனடியாக அமுல்படுத்தப்படும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு அரசாங்கம் அபாயா, ஹிஜாப் மற்றும் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளுக்குத் தடை விதிக்கும் வகையில் 1989.02.01 திகதியிடப்பட்ட 8/89 இலக்கத்தைக் கொண்ட பொதுநிருவாக சுற்று நிருபத்தை மீண்டும் 2019.05.29 ஆம் திகதியிடப்பட்ட 13/2019 திருத்தப்பட்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த விவகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையிலும் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் தெரிவுக்குழு பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியை அழைத்து கலந்துரையாடப்பட்ட போது இந்த சுற்றுநிருபத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக உறுதியளித்திருந்தார்.

இதற்கமைவாக சுற்று நிருபத்தில் இரண்டு விடயங்கள் தொடர்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய திருத்தப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய முஸ்லிம் பெண்கள் அபாய அணியவும், முகங்கள் முழுமையாக தெரியக்கூடிய வகையில் ஹிஜாப், நிகாப் அணியவும் அனுமதி கிடைத்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முகத்தை மூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தின் காரணமாக முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதால், பொருத்தமான அறிவிப்பைத் தெளிவாக வெளியிட நடவடிக்ைக எடுக்குமாறு முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.எம். நிலாம்

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை