வெளிநாட்டு கரன்சிகள் தொடர்பில் செலாவணி சட்டத்தில் திருத்தம்

சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் முற்றாக தடுக்க மத்திய வங்கி தீர்மானம்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருத்தல், வெளிநாட்டு பணப் பரிமாற்றம் போன்ற செயற்பாடுகளை முற்றாக தடுக்கும் வகையில் நடைமுறையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய திருத்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

வங்கி முறைக்கு அப்பால் வேறு வழிகளில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் கொண்டு வருவதையும் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு பணம் அனுப்பப்படுவதையும் முற்றாக தடுக்கும் வகையிலேயே நடைமுறையிலுள்ள சட்டத்தில் திருத்தங்கள் உள்வாங்கப்படவுள்ளன.

நடைமுறையிலுள்ள 1953 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க வருமானத்தை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணி சட்டம் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை கருத்திற் கொண்டதன் பின்னரே இச்சட்டங்களில் திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு செலாவணி சட்டத்துக்கு உள்வாங்கப்பட வேண்டிய புதிய திருத்தம் தற்போது திறைசேரி மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்துக்குப் பொறுப்பான உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்புதிய சட்டத்துக்கமைய சட்டவிரொதமான முறையில் வெளிநாட்டுக் கரன்ஸிகளை உடன் வைத்திருத்தல், பணப்பரிமாற்றம் செய்தல் என்பவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் கூறினார்.

ஜயசிறி முனசிங்க

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை