இடைவிடாத பயிற்சி, தயார்படுத்தல்களால் வெற்றி பெற்றோம்

- சகிப் அல்-ஹசன்

உலகக் கிண்ணத் தொடரில் சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் -ஹசன், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக (24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரைச் சதம் அடித்திருந்ததுடன், பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி பங்களாதேஷ் அணிக்கான முக்கியமானதொரு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற சகிப், உலகக் கிண்ணத்திற்கு முன் மேற்கொண்ட தயார்படுத்தல்கள் மற்றும் கடின உழைப்பு என்பன இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக பலனைக் கொடுத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் (24) நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தி அசத்தியது.

பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான சகிப் அல்- ஹசன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அரைச் சதம் கடந்து 51 ஓட்டங்களையும், 10 ஓவர்கள் பந்துவீச்சி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கனையும் வீழ்த்தினார். உலகக் கிண்ணப் போட்டிகளில் 1000 ஓட்டங்களுடன் 28 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனைனயும் நிகழ்த்தினார்.

இவரது சகலதுறை ஆட்டத்தின் உதவியினால் பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சகிப் அல்- ஹசன், உலகக் கிண்ணத்திற்கு முன் கடுமையான பயிற்சிகள் மற்றும் தயார்படுத்தல்களை மேற்கொண்டேன். அதற்கான பிரதிபலன்களை தற்போது பெற்று வருகிறேன்.

இந்த அபார ஆட்டமானது எனது கடின உழைப்புக்கும், அதிஷ்டத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். எனவே இவ்வாறான ஆடுகளங்களில் முழுமையான கவனத்துடன் துடுப்பெடுத்தாடுவது முக்கியமாகும். எனவே எனது அரைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி ஏற்பட்டது. மறுபுறத்தில் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதும் சிறப்பானது.

அதேபோல முஷ்பிகுர் ரஹீம் இல்லாவிட்டால் நாங்கள் இந்தளவு ஓட்டங்களைப் பெற்றிருக்க மாட்டோம். ஏனைய வீரர்களும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். எனவே இந்த வெற்றியானது எமது ஒட்டுமொத்த, முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடிப்பது கடினமாக இருக்கும் என நினைத்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில் 300 அல்லது 350 ஓட்டங்களைப் பெறுவதென்பது மிகவும் கடினமாகும்.

குறிப்பாக, எதிரணியினர் 3 முக்கிய சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதால் அது எமக்கு கடினமாக இருக்கும் என்று அறிந்து வைத்தோம். எனவே அவர்களுக்கு எதிராக நிதானமாக விளையாடி ஓட்டங்களைக் குவிக்க வேண்டியிருந்ததுடன், அந்தப் பொறுப்பை என்னால் செய்ய முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை விளையாடிய விதம் குறித்து நான் மிகவும் திருப்தி அடைகிறேன். எமது வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

நாங்கள் 50 ஓவர்கள் விளையாடி 240 ஓட்டங்களுக்கு அதிகம் குவிக்க வேண்டும் என்பது எமது இலக்காக இருந்தது. எனினும், நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய 20 ஓட்டங்களை மேலதிகமாகவும் பெற்றோம். இது எமக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளமாக இருந்தது.

எனவே நாணய சுழற்சியில் வெற்றிபெறும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தமை எமக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆனால் இது அவர்களது திட்டங்களில் ஒன்றாகவும் இருந்திருக்கலாம். உண்மையில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்த முடியுமா என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் மிகவும் அபாயகரமான அணி, எனினும், எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை 100 சதவீதம் சரிவரச் செய்தோம்.

இதனால் எமது இலக்கை வெற்றி கொண்டோம். இனிவரும் 2 போட்டிகளும் மிகவும் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக, அடுத்து நாங்கள் இந்தியாவை சந்திக்கவுள்ளோம். இம்முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

உலகின் முன்னணி வீரர்களைக் கொண்ட இந்தியாவை வெல்வது இலகுவான விடயம் அல்ல. எனினும், எமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்த்துவதற்கான அனைத்து திறமைகளும் எம்மிடம் உள்ளது என நான் நம்புகிறேன் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு பங்களாதேஷ் அணி தகுதிபெறுமா என எழுப்பிய கேள்விக்கு சகிப் பதிலளிக்கையில், இங்கிலாந்துக்கு இன்னும் 3 போட்டிகளில் எஞ்சியுள்ளன.

நாங்கள் இன்னும் போட்டிகள் விளையாட வேண்டும். அந்த இரண்டையும் நாங்கள் வெற்றிபெற வேண்டும். உண்மையில் இது கடினமான விடயமாகும். ஆனாலும், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். எனினும், அடுத்த 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என கூறினார்.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை