பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் என்னை கைது செய்யுங்கள்

தௌஹீத் பெயரை பயன்படுத்தி சஹ்ரான் பயங்கரவாத செயற்பாடுகளை செய்தாலும் ஏனைய தௌஹீத் அமைப்புகள் அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லையென சிலோன் தௌஹீத் ஜமாஅத் செயலாளர் அப்துல் ராஸிக் தெரிவித்தார்.என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் கூறுகிறார்கள்.நான் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தால் என்னை கைது செய்து தண்டிக்கட்டும் என்றும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

ஐ.எஸ்ஸை முற்றாக நிராகரிக்கிறோம்.அவர்கள் முஸ்லிம்களல்ல.ஆயுதம் ஏந்திய குழுக்கள் பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளோம். 2015 முதல் ஐ.எஸ்ஸை நிராகரித்து வருகிறேன். இறுதியாக 2018 இல் ஐ.எஸ் பயங்கரவாதி என்பதை பாணந்துறையில் நடந்த கூட்டமொன்றிலும் கூறியிருக்கிறேன்.

தௌஹீத் பெயரை பயன்படுத்தி சஹ்ரான் பயங்கரவாத செயற்பாடுகளை செய்தாலும் ஏனைய தௌஹீத் அமைப்புகள் அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லை.நான் ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு துணையானது கிடையாது. நான் தவறு செய்திருந்தால் கைது செய்து என்ன தண்டிக்கலாம்.

சஹ்ரான் ஒருபோதும் எம்முடன் இருக்கவில்லை. சிலர் குற்றம்சாட்டினாலும் அதற்கான எந்த சாட்சியமும் கிடையாது.எமக்கு எதிராக சஹ்ரான் பிரசாரம் செய்தார்.எம்மை கொல்ல வேண்டும் என்றும் கூறினார்.நாம் ஜிஹாதை எதிர்த்தாலும் சஹ்ரான், ஜிஹாதிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். 21 ஆம் திகதி தாக்குதல் நடைபெறும் வரை ஜிஹாதிற்கு ஆதரவாக பேசியுள்ளார். முகநூலில் வீடியோக்களை பதிவேற்றுவார்.

2016 இன் பிற்பகுதியில் ஜிஹாதிற்கு ஆதரவாக அவர் உரையாற்றியபோது நாம் சி.ஐ.டியில் இது பற்றி முறையிட்டோம்.பணத்திற்காக நாம் இவ்வாறு உளவுப்பிரிவுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை.

அவரின் ஜிஹாத் தொடர்பான கருத்துக்கள் காரணமாக அவர் தொடர்பில் சந்தேகம் வந்தது.ஒருநாள் பயங்கரவாதத்தின் பக்கம் இது செல்லலாம் என்பதால் பாதுகாப்பு தரப்பிற்கு அதுபற்றி அறிவித்தோம்.விசாரணை நடத்துமாறு கோரியிருந்தோம்.

அரபு மொழி எமது மார்கத்துடன் தொடர்புபட்டது. அரபு மொழி தொடர்பில் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது.அன்றாடம் அரபு வசனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இங்கு அரபு கலாசாரம் உருவாவதை நாம் ஏற்கவில்லை.கறுப்பு உடை, ஜுப்பா போன்ற உடைகளை கட்டாயப்படுத்த முடியாது. அந்தந்த நாடுகள் காலநிலைகளுக்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டும். குர்ஆன் மற்றும் நபி வழியிலே நாம் செயற்படுகிறோம்.

பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிப்பதில் பிரச்சினை இல்லை.அது தவிர தேவைக்கு அமைய குறைந்த வயதினருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம். மகேஸ்வரன் பிரசாத்

 

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை