மக்கள் உண்மையை அறியும் உரிமையை மறுக்கும் முனைப்பு

தெரிவுக்குழுவை இடைநிறுத்த முயற்சி;

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை இடைநிறுத்த முயற்சிப்பதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடந்தது என்பதை அறிந்துகொள்ள நாட்டு மக்களுக்கு காணப்படும் உரிமையை மறுக்கவே ஜனாதிபதி முனைப்புக் காட்டுவதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியது.

தெரிவுக்குழு அமைத்து அதிகாரிகள் சாட்சியமளிக்கத் தொடங்கியதும் தெரிவுக்குழுவை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி, அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மக்களுக்கு தகவல் அறியும் உரிமை

மறுக்கப்படும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தெரிவுக்குழுவை இடைநிறுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினரும் உதவி வருகின்றனர். தெரிவுக்குழு அமைத்தமுறை தவறானது எனக் கூறி வருகின்றனர். தமது உயிர்களை பலியெடுப்பதற்குக் காரணமாகவிருந்த தாக்குதல்களில் யார் தமது கடமைகளைத் தவறவிட்டுள்ளனர் என்பதை அறிவதற்கான உரிமை மக்களுக்கு இல்லையா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரில்வின் சில்வா இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். தமது இயலாமைகள் வெளிப்படத் தொடங்கியதும் தாம்விட்ட தவறுகளைத் திருத்துவதற்குப் பதிலாக, தகவல்கள் புலப்படும் வழிகளைத் தடுத்து தெரிவுக்குழுவின் செயற்பாடுகளையும் இடைநிறுத்துவதற்கே முயற்சிக்கின்றனர். இவர்கள் இன்னமும் பாடங்கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இது புலப்படுத்துகிறது. தமது பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கு ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அரசாங்கமோ தயாராகவில்லை. இதனைவிடுத்து குண்டுதுழைக்காத கார்களில் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

பாரிய அழிவொன்றை நாடு சந்தித்த பின்னரும் அதிலிருந்து பாடம் கற்க அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில், எதிர்காலத்தில் எந்தவொரு அசம்பவாவிதம் நிகழ்ந்தாலும் அதனை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது என்பதையே இவர்களின் செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் மீது மேலும் பாரத்தை சுமத்தி அதனூடாக தமது கடமைகளிலிருந்து விலகியிருப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உண்மையில் அரசாங்கம் மக்களுக்கோ அல்லது மக்கள் ஆணைக்கோ மதிப்பளிப்பதில்லை. தெரிவுக்குழுவின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். என்ன தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை சாட்சியங்களின்போது வெளிப்படுத்தாமல் இருக்க முடியும் என தெரிவுக்குழுவின் உறுப்பினர்களே கூறியுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் கையொப்பமிட்டே தெரிவுக்குழுவைக் கோரியிருந்தனர். தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட பின்னரே ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுகிறது, ரிஷாட் பதியுதீனைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி தெரிவுக்குழுவில் பங்கெடுக்காமல் இருந்தனர்.

தற்பொழுது ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அவர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெறப்பட்டுள்ளபோதும் தெரிவுக்குழுவுக்குச் செல்லமுடியாது தடுமாறுகின்றனர். அவர்கள் இல்லாமலே பல விடயங்கள் தெரிவுக்குழுவின் ஊடாகப் புலனாவதால் அதனை ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றனர் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை