சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் சிவிலியன், போராளிகள் பலர் பலி

சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பில் அரச படை நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வைட் ஹெல்மட் சிவில் பாதுகாப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

மரத் அல் நுமான் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதோடு அல் பராவில் இடம்பெற்ற தாக்குதலில் மூன்று சிறுவர்கள் மற்றும் அவர்களின் தந்தை கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் மேலும் 15 பேர் காயமடைந்ததாக வைட் ஹெல்மட் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே அரச படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்களிடையே இடம்பெற்ற மோதல்களில் 34 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. 26 துருப்புகள் மற்றும் அரச ஆதரவுப் போராளிகள் மற்றும் எட்டு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இத்லிப்பை ஒரு யுத்த தடுப்பு வலயமாக ஏற்று துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கடந்த செப்டெம்பரில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. இதன்படி அங்கு தாக்குதல்கள் தடுக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

எனினும் இந்த உடன்படிக்கை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. திட்டமிடப்பட்ட இராணுவமற்ற வலயத்தில் இருந்து வாபஸ் பெற போராளிகள் மறுத்தனர். இத்லிப் அரச எதிர்ப்பாளர்கள் வசமிருக்கும் கடைசி பகுதியாகும். இங்கு முன்னாள் அல் கொய்தா அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு சிரிய அரசு மற்றும் அதன் கூட்டணியான ரஷ்யா தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை