அநாவசிய பிரச்சினைகளை எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஏற்படுத்தக் கூடாது

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தேவையற்ற கதைகளைப் பேசி அநாவசியமான பிரச்சினைகளை நாட்டுக்குள் ஏற்படுத்தக் கூடாதென, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். உலகத்தில் பெரும்பான்மை என்ற விடயத்தை உலகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இலங்கைக்குள் தேவையில்லாத பிரச்சினைகள் கொண்டுவரக்கூடாது என்றும் அவர்

வலியுறுத்தினார்.

"நாம் இலங்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் உலகில் பெரும்பான்மையானவர்கள்" என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கூறியிருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். ஹிஸ்புல்லா எமது கட்சி உறுப்பினராக இருந்தாலும் தேவையற்ற பிரச்சினைகளை நாட்டுக்குள் கொண்டுவரக்கூடாது எனக் கூறிக்கொள்கின்றோம். உலகத்தில் நீங்கள் பெரும்பான்மையானவர்களா? இல்லையா? என்பது எமக்குத் தேவையற்ற விடயம். இலங்கையில் எப்படி இருக்கின்றோம் என்பதே தேவையான விடயமாகும்.

உலகத்தில் பெரும்பான்மையானவர்களுடன் இணைந்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டுக்குள் தற்பொழுது தோன்றியுள்ள பிரச்சினையிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றோம் என்பதே தற்போதைய தேவையாகும். உலகத்தில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற விடயங்களை நாட்டுக்குள் கொண்டுவர வேண்டாம் என்பதைக் கூறிக் கொள்கின்றோம்.

எம்முடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகித்தவர் என்ற ரீதியில் உலகப் பிரச்சினைகளை இங்கு கொண்டுவரவேண்டாமென ஹிஸ்புல்லாவிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார். இதேவேளை, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து தமது பதவிகளைத் துறந்து பிழையான முன்னுதாரணத்தை வழங்கியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். சகல பிரச்சினைகளுக்கும் ஆரம்பம் எங்கே உள்ளது என்பதையே அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஆராய வேண்டும். அதனைவிடுத்து பிரச்சினையின் முடிவினைப் பிடித்துக்கொண்டு ஆராயக் கூடாது என்றார். எட்டுப்பேர் செய்த செயலுக்காக ஏன் எமது பள்ளிவாசல்களுக்கு தினமும் வருகின்றீர்கள் என பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த சிலர் எம்மிடம் கேட்கின்றனர். ஏதோ நாங்களும், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸாரும் தவறு செய்தவர்கள் போல இந்தக் கேள்வியை எம்மிடம் கேட்கின்றனர். பிரச்சினையை நுணியில் பிடித்து ஆராய வேண்டும். அவர்களின் இனத்தைச் சேர்ந்த அவர்களின் மதத்தைப் பின்பற்றிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எட்டுப் பேரினாலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தவர்களின் வீடுகளுக்கு பத்து தடவைகள் சோதனைக்கு வந்திருந்தாலும், நாய்களுடன் பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்தாலும் இதற்கு எல்லாம் நாமா காரணம். இல்லை அவர்களின் இனத்தைச் சேர்ந்த அடிப்படைவாத பயங்கரவாதிகளே. எனவே பதவிகளிலிருந்து விலகியவர்கள் பிரச்சினையை ஆரம்பத்திலிருந்து ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை