நாட்டையும் வாக்களித்த மக்களையும் ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டேன்

அஸ்கிரிய மகாநாயக்கருடனான சந்திப்பில் கபீர் ஹாசிம்

தமக்கு வாக்களித்த ஆதரவாளர்களையும், நாட்டையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

தன்மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றவர்கள், அதனை நிரூபித்துக் காட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்திற்கு வெள்ளிக்கிழமை (14) விஜயம் செய்து மகாநாயக்கர் வரக்காகொட ஞானரதன தேரரை சந்தித்து நிலைமைகளை கபீர் ஹாஷிம் தெளிவுபடுத்தினார்.

அண்மைக்காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதேபோன்று நாட்டிற்கு முன்னுரிமை வழங்குவதன் அவசியத்தையும் முஸ்லிம் சமூகத்தினர் அறிந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் புலனாய்வுப் பிரிவுகளுக்கும் இராணுவத்தினருக்கும் விசாரணைகளுக்கு அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை சிலர் சுமத்தி வருவதாகவும் மகாநாயக்க தேரரிடம் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த சூழ்நிலையின் கீழ், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமை தங்களின் தனிப்பட்ட முடிவல்ல. நாட்டைப் பற்றி சிந்தித்தே அனைவரும் பதவி விலகத் தீர்மானித்தோம். பதவி விலகியதன் மூலம் அரசியல் ரீதியாக தனக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், கேகாலை மாவட்டத்தில் பெருமளவு வாக்குகளை சிங்கள மக்கள் தனக்கு வழங்கியிருந்ததாக அவர் இதன்போது எடுத்துக்கூறினார்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களில் 99 வீதமானவர்கள் அடிப்படைவாதிகள் என்று கூறுவது உகந்ததல்ல. சிங்கள மன்னர்களுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாம் வாழ்ந்து வந்துள்ளோம். ஒரு சிறு குழுவினரே தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை திரிபுபடுத்தியுள்ளார்கள். பல்வேறு கலாசாரங்களையும், சிந்தனைகளையும் இஸ்லாத்தினுள் திணித்து, அவர்களின் தேவைக்கேற்ப முஸ்லிம் மக்களை பயன்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாகவே நாம் ஒரு முடிவை எடுக்க நேரிட்டது. நாட்டின் பிரதான கலாசார விழுமியங்களுடன் நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாழ்ந்து வந்துள்ளோம். இந்த நாட்டின் சட்டத்திற்கும் நாம் மதிப்பளித்து வருகின்றவர்கள். அதன் பொருட்டு தமது உயிர்களைக் கூட அர்ப்பணித்த சமூகத்தினராகும். இந்த சூழ்நிலையில் மத்தியஸ்த முஸ்லிம் தலைவர்கள் அதனைவிட பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக தற்காலிகமாக இத்தகைய தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக கபீர் ஹாசிம் அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் சுட்டிக்காட்டினார்.

(தினகரன் செங்கடகல நிருபர் - )

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை