ஐ.நா பாதுகாப்புச் சபையின் அறிக்கையை தடுத்த ரஷ்யா

இத்லிப் தாக்குதலை கண்டிக்கும்:

சிரியாவின் மேற்கு பிராந்தியமான இத்லிப் மீதான சிரிய இராணுவ நடவடிக்கையை கண்டிக்கும் பாதுகாப்புச் சபை அறிக்கையை ரஷ்யா முடக்கியுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கை பாரிய மனிதாபிமான அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்று அச்சம் நிலவி வருகிறது.

இந்த அறிக்கை சமநிலை அற்றது என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. இதில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிராக சண்டையிடும் அமெரிக்க ஆதரவு போராளிகளினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ஹஜின் அல்லது பாகுஸ் பகுதி குறிப்பிடப்படவில்லை என்று ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

ஜிஹாதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப்பில் வன்முறைகள் அதிகரிப்பது குறித்து பாதுகாப்புச் சபையின் இரு அவசரக் கூட்டத்திற்குப் பின் பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் குவைட் நாடுகள் இந்த அறிக்கையை முன்மொழிந்தன.

மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இத்லிப் பிராந்தியத்தில் மனிதாபிமான அவலம் குறித்து சுட்டிக்காட்டும் மற்றொரு பாதுகாப்புச் சபை அறிக்கையை ரஷ்யா கடந்த மாதம் முடக்கியது. பாதுகாப்புச் சபை அறிக்கைக்கு 15 உறுப்பு நாடுகளும் ஒருமித்து உடன்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் நட்பு நாடான சிரியா கடந்த ஏப்ரல் தொடக்கம் இத்லிப் மீது வான் தாக்குதல்களை நடத்திவருதோடு ஷெல் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் அங்கிருந்து 270,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அறிக்கையின் அனைத்து விடயங்களையும் ரஷ்யா நிராகரிக்கிறது என்று ரஷ்ய துணைத் தூதுவர் டிமிட்ரி பொலின்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை பொது உறவிகள் உத்தியுடன் வரையப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

வட மேற்கு சிரியாவில் மருத்துவமனைகள், பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் உட்பட உக்கிரமடைந்திருக்கும் மோதல்கள் கவலை அளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் துருக்கி இடையில் செய்யப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் எல்லைகளுக்கு அனைத்து தரப்புகளும் திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த உடன்படிக்கையை கடைப்பிடிப்பதாக உறுதி அளித்திருக்கும் ரஷ்யா பயங்கரவாதிகள் மாத்திரமே இராணுவ நடவடிக்கையில் இலக்கு வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இத்லிப்பின் பெரும் பகுதியை முன்னாள் அல் கொய்தா உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தும் தஹ்ரிர் அல் ஷாம் குழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

எனினும் இத்லிப் மீதான யுத்தமானது கடந்த எட்டு ஆண்டு சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை காணாத பேரழிவை ஏற்படுத்தும் என்று மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை