தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு; ஜூலை 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

5 சாட்சியங்களும் வழக்கிலிருந்து விடுவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராகவிருந்த தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான பாரதூரமான குற்றச்சாட்டை குறைத்துக் கொள்வது தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதற்கு இணக்கம் தெரிவித்த சட்ட  மாஅதிபர், அது தொடர்பான முடிவை நீதிமன்றத்துக்கு அறிவிக்க வவுனியா மேல் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. 

அதற்கு அமைவாக தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 8ஆம் திகதிவரை ஒத்திவைத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் உத்தரவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்.  

போர் முடிவுக்கு வந்த பின்னர் நீதிமன்றத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவில் தற்போது பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. 

கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009மே 18ஆம் திகதிக்கு உள்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களான இளம்பரிதி மற்றும் திலக் ஆகியோருடன் இணைந்து அப்போது நடைபெற்ற போர் காலப் பகுதியில் புதுமாத்தளன் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பொது மக்களை விடுவிக்காமல் தடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளின் தேவை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மனிதக் கேடயங்களாக்கியதன் மூலம் தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்குநேற்று விளக்கத்துக்காக நியமிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் வழக்குநேற்று விளக்கத்துக்காக அழைக்கப்பட்டது. 

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு நியமித்தது. அத்துடன், வழக்குத் தொடுநரின் அனுமதியுடன் அழைக்கப்பட்ட 5 சாட்சிகளையும் வழக்கிலிருந்து விடுவித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

யாழ். விசேட நிருபர்  

Sat, 06/08/2019 - 11:21


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக