தாய்மார், மருத்துவர்கள் உட்பட 758 பேரிடம் வாக்குமூலம் பதிவு

27ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
முறைப்பாடுகளை விசாரிக்க விசேட விசாரணைக் குழு

குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் செய்கு சிகாப்தீன் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில், சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொண்ட தாய்மார் மற்றும் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர்கள், தாதியர் உட்பட 758 பேரிடம் வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.

இந்த சாட்சியங்கள் தொடர்பான அறிக்கையொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் தொடர்பிலான பரிசோதனைகள் கொழும்பு காசல் மற்றும் டி சொய்சா மருத்துவமனைகளில் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். சிசேரியன் சத்திரசிகிச்சையின் போது 4,000 சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்ததாகவும் முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும் டொக்டர் சாபி கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவர் தொடர்பில் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி முதல் குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த மூன்று வார காலத்தில் சம்பவம் தொடர்பில் பலரிடம் சி.ஐ.டி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிசேரியன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 601 தாய்மாரிடமும் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணத்துவ மருத்துவர்கள் ஏழு ​பேரிடமும் சிரேஷ்ட மருத்துவர் ஒருவரிடமும் குறைமாத குழந்தை தொடர்பான மருத்துவர்கள் அறுவரிடமும் சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவருக்கு உதவும் 11 மருத்துவர்களிடமும் 10 மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்களிடமும் சி.ஐ.டி வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிசேரியன் சத்திர சிகிச்சை நடத்தும் போது இரு தாதியர் அதில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவ்வாறு பணியாற்றிய 70 தாதிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன. இது தவிர ஒரு பிரதான தாதி மற்றும் ஆஸ்பத்திரி பணிப்பாளர் ஆகியோரிடமும் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்கு உதவும் ஆஸ்பத்திரி சிற்றூழியர்கள் 18 பேர் உட்பட 126 ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள அதே வேளை, விசாரணைக்கு முக்கியம் என கருதப்படும் மேலும் 31 பேரிடமும் சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் கடந்த மூன்று வாரத்தில் மொத்தமாக சி.ஐ.டியினால்758 வாக்கு மூலங்கள் பதியப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள டொக்டர் சாபியிடம் பல தடவைகள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.இதன் போது சகல வாக்கு மூலங்களினதும் சுருக்கம் சி.ஐ.டியினால் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதிமன்றத்தினூடாக பல உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.சி.ஐ.டி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குருநாகல் ஆஸ்பத்திரி பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்கள் தொடர்பில் விசேட விசாரணை குழுவொன்றை நியமிக்கவும் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.இதில் கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் இரு மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் நிபுணத்துவ மருத்துவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இது தவிர கடந்த 5 வருட காலத்தில் குருநாகல் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பிரசவ மற்றும் பெண்நோயியல் மருத்துவர்கள் மேற்கொண்ட சிசேரியன் சத்திரசிகிச்சைகளின் தொகையை வழங்குமாறும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஏற்பட்ட தாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

இதேவேளை, முறைப்பாடு செய்துள்ள பெண்கள் தொடர்பில் கொழும்பு காசல் மற்றும் டி சொய்சா ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைகள் நடத்தப் படவுள்ளன. பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்களை எந்த தட்டுப்பாடுமின்றி வழங்குமாறும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று வார காலத்தினுள் சி.ஐ.டியினால் விசாரணை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆறுபேர் கொண்ட குழு வொன்றை நியமித்து விசாரணை நடத்தியதோடு குருநாகல் ஆஸ்பத்திரியும் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. டொக்டர் சாபிக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் குறைந்தளவான பெண்களே விசாரணைக்காக முன்வந்துள்ளதாக அறிய வருகிறது. (பா)

ஷம்ஸ் பாஹிம்

 

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை