மேற்கிந்திய தீவுகளை 7 விக்கெட்டால் வீழ்த்தியது பங்களாதேஷ் அணி

தரவரிசையில் 5ம் இடத்துக்கு முன்னேற்றம்

பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட வீரர் சஹீப் அல் -ஹசன் மற்றும் லிட்டன் தாசின் அபார ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டால் அபார வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் அட்டவணையில் 5 இடத்துக்கு முன்னேறியது.

322 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் சுமையா சர்கார் இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த வேளை சர்கார் 29 ஓட்டங்கள் பெற்ற வேளை ரஸலின் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் தமீம் இக்பாலுடன் இணைந்தார் சஹீப் அல் ஹசன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிக்காட்டிய நிலையில் தமீம் இக்பால் 48 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.பின்னர் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம் இணைந்தார்.அவரும் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துக்கு ஆட்டமிழக்க பின்னர் ஹசனுடன் இணைந்தார் லிட்டன் தாஸ் இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்காக 189 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.பங்களாதேஷ் அணி 41.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.அவ்வணி சார்பாக ஹசன் ஆட்டமிழக்காமல் 99 பந்துகளை எதிர்கொண்டு 16 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டங்களை பெற்றார்,மறுமுனையில் லிட்டன் தாஸ் 69 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 94 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவு அணி சார்பாக ரஸல் ,தோமஸ் தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக சஹீப் அல் ஹசன் தெரிவானார்.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் பங்களாதேஷ் அணி அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தி வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் உலக கிண்ணத்திலும் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

அத்துடன் பங்களாதேஷ் அணி 2017 ம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியை காடிப் மைதானத்தில் துரத்தி வெற்றி பெற்றது,பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் ஹசன் -மஹ்மூதுல்லா ஜோடி சிறப்பாக ஆடி அந்த வெற்றியை பெற்றிருந்தனர்.

மேற்கிந்திய தீவு. - பங்களாதேஷ் அணிகள் மோதிய உலகக் கிண்ண தொடரின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி தலைவர் மோர்தசா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி மேற்கிற்திய தீவு அணியின் கிறிஸ் கெய்ல், லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் பங்களாதேஷ் அணி மிகவும் சிறப்பாக பந்து வீசியது. இதனால் மேற்கிந்திய தீவு தொடக்க துடுப்பாட்டவீரர்கள் திணறினர். கிறிஸ் கெய்ல் 13 பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து லிவிஸ் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் சிறப்பாக விளையாட ஆரம்பித்தது. லிவிஸ் 67 பந்தில் 70 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 25 ஓட்டங்களிலும், அந்த்ரே ரஸல் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.ஹெட்மையர் 26 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் சரிந்தாலும் மறுமுனையில் ஷாய் ஹோப் சதத்தை நெருங்கினார். ஆனால், 121 பந்தில் 96 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சதம் அடிக்கும் வாய்பை கோட்டைவிட்டார்.

ஜேசன் ஹோல்டர் 15 பந்தில் 33 ஓட்டங்களும், டேரன் பிராவோ 15 பந்தில் 19 ஓட்டங்களும் அடிக்க மேற்கிந்திய தீவு 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் முகமது சாய்புதின் 10 ஓவரில் 72 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் 9 ஓவரில் 59 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை