50 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க நிதி அமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

வரவு - செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்ட 50ரூபாவை வழங்க, நிதி அமைச்சு துரிதநடவடிக்கை எடுக்க வேண்டுமென பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.  

ஏப்ரல் மாதம் முதல் இதுவரை காலப்பகுதியில் இந்த கொடுப்பனவு வழங்குவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இவ்விடயம் தொடர்பில் பாரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டா லும், அதுவும் பின்னடைந்து செல்வதாகவே இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.  

 இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்ட  தலைவர்களின் கூட்டம் மாநில அமைப்பாளர் தர்மதாச த சில்வா, மாநில இயக்குநர் சிவலிங்கம், சிட்டரசு ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து இக் கூட்டத்திற்கு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் வே.ருத்திரதீபன் தேசிய அமைப்பாளர் எஸ்.விஜயகுமார் உட்பட மாநிலங்களின் தலைவர்கள், தலைவிகள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இதன் போது தொழிற்சங்கத்தின் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாகவும் தோட்டங்களில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்தும் ஆராயப்பட்டது. 

தொடர்ந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்: 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த சில காலங்களில் பல போராட் டங்களும் 27கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இதில் சகலரும் பிரதேச வேறுபாடுகளின்றி போராட்டங்களில் பங்கேற்றதுடன் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இதில் சகலரது கோரிக்கையும் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பாகவே இருந்தது. எனது கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. இருந்தும் இதற்கு கம்பனிகள் ஒத்துழைக்காததால் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தொகையில் தொழிலாளர்களுக்கு நன்மை பகைக்க கூடிய விதத்தில் 700ரூபாய் அடிப்படை சம்பளமும் 50ரூபாய் விலைக் கொடுப்பனவும் மேலதிக இறாத்தலுக்கு தேயிலை 40ரூபாய், இறப்பர் 45ரூபாவும்; கட்டாயம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது போதாது மேலும் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என்ற மலையக தலைவர்களின் வேண்டுகோளுக்கமைய நாள் ஒன்றுக்கு 50ரூபாய் வரவு – செலவு மூலம் நிதி அமைச்சின் ஊடாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இருந்தும் இந்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் வழங்கபட வேண்டிய நிலையில் அவை இன்னும் வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வழங்க மலையக ஏனைய தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இன்னும் ஒரு சரியான முடிவு வராமல் இருப்பது வேதனைக்குரியது. இதனை முடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

ஆரம்பத்தில் இருந்த சூடு தற்போது இல்லை என்றும் கூறினார்.

Thu, 06/20/2019 - 08:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை