ரயில் வேலை நிறுத்தத்தால் 45 ரயில் சேவைகள் இரத்து

பயணிகள் பெரும் அவதி; கொழும்பில் அலுவலகப் பணிகள் பாதிப்பு

புகையிரத தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்துவரும் 48 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தால் புகையிரதப் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பயணிகளும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் சுமார் 45 ரயில் சேவைகள் நேற்று இரத்துச் செய்யப்பட்டிருந்தாக புகையிரத திணைக்களம் தெரிவித்தது.

இன்றைய தினமும் பல புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுமெனவும் அத்திணைக்களம் அறிவித்தது. பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை, மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் அனைவரதும் விடுமுறைகளும் இரண்டு நாட்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.

இதேவேளை, பயணிகளை கருத்திற்கொண்டு மேலதிக தனியார் பஸ்களும் நேற்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்கவுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்தே புகையிரத தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. சம்பளம், கொடுப்பனவு, சலுகைள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், உதவியாளர்கள் உட்பட பல பணிகளுக்கான பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகவே புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புகையிரத ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சரவையில் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே புகையிரதத் தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையாகவுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையின் காரணமாகவே நாங்கள் போராட்டத்தில் குதித்துள்ளோம். புகையிரத ஊழிர்களின் கொடுப்பனவு தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை