மட்டக்களப்பில் முதல் கட்டமாக 4000 பொருத்து வீடுகள்

மட்டக்களப்பில் முதல் கட்டமாக 4000 பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளன. அமைச்சர சஜித் பிரேமதாசவின் அமைச்சினூடாக அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

களுதாவளையில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மூன்று வீதிகள் திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போது அவர் அதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கிராம பெரியோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எமது மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும், சர்வதேசத்திலும், குரல் கொடுத்தோம். ஆனாலும், யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மண்ணிலே அபிவிருத்தி என்பது மிகவும் குறைந்த நிலையில் சென்று கொண்டிருந்தது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்யுங்கள் என்று மேலைத்தேய நாடுகள் அப்போதிருந்த ராஜபக்ஷ அரசுக்கு பெருந் தொகையான நிதியை வழங்கியிருந்தன. ஆனால் அதில் கடனாக வருகின்ற நிதியை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவிட்டு மானியமாக வருகின்ற நிதியையெல்லாம் தென்பகுதியில் கொட்டினார்கள்.

இந்த நாட்டில் மாறி மாறி தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வரும். அதில் ஒரு கட்சி தமிழர்களுக்குத் தீர்வை வழங்க முற்பட்டால் மற்றைய கட்சி எதிர்ப்பது வழமையாகியிருந்தது. பின்னர் 2015 இல் இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்தது. அதற்கெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில ஆதரவை வழங்கியது என்ற காரணத்தினால் எமக்கு சில அபிவிருத்தித் திட்டங்களை வழங்கியிருந்தார்கள். இந்த நாட்டில் முதலில் யார் அரசியலமைப்பை கடைப்பிடிக்க வேண்டுமோ அவரே அரசியலமைப்பை மீறியதைக் கண்டோம். அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன் முதலில் நீதிமன்றம் சென்றது. பின்னரே ஏனைய கட்சிகள் சென்றன. இறுதியில் 19 வது திருத்தச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது பிழை என தீர்ப்பு வந்தது.

அப்போதும்கூட ராஜபக்ஷ் தரப்பும், ரணில் விக்கிரமசிங்க குழுவினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசினார்கள். பின்னர்தான் ஜனநாயகத்தை ஓரளவு மத்தித்தவர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 14 பேரும் ஆரதவு வழங்கினோம் என்றார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை