அபார பந்து வீச்சால் 34 ஓட்டங்களால் ஆப்கானை வீழ்த்தியது இலங்கை

உலகக் கிண்ணப் போட்டியில் துடுப்பாட்டத்தில் சறுக்கிய போதும், அபாரமான பந்துவீச்சின் மூலம் இலங்கை அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில், அணிக்குட 41 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட, இலங்கை அணி 201 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது. இதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு டக்வத் லூவிஸ் முறைப்படி 187 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பந்து வீச்சாளர்களின் அபாரத்தால் இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.கார்டிப் – ஷோபியா கார்டன் மைதானத்தில் (04) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ​போட்டியில்

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்துடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எவ்வித மாற்றங்களும் இன்றி களமிறங்க, இலங்கை அணியின் சார்பில் வேகப் பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில், ஜீவன் மெண்டிஸிற்கு பதிலாக நுவன் பிரதீப் இணைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை அணியின் சார்பில், திரிமான்னவுக்கு பதிலாக குசல் பெரேரா, திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். புதிய ஆரம்ப ஜோடியுடன் களமிறங்கிய இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றது. குறிப்பாக குசல் பெரேரா வேகமாக ஓட்டங்களை குவிக்க, திமுத் கருணாரத்ன நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இருவரும், முதல் விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 30 ஓட்டங்களுடன் மொஹமட் நபியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய லஹிரு திரிமான்ன நிதானமாக ஓட்டங்களை குவித்ததுடன், இதில் அவர் 6 ஆவது ஓட்டத்தை பெற்றபோது, ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்களை கடந்தார். 100 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய இவர், வேகமாக 3000 ஓட்டங்களை பெற்ற மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் உபுல் தரங்க 93 இன்னிங்களிலும், மாவன் அத்தப்பத்து 94 இன்னிங்சுகளிலும் 3000 ஓட்டங்களை கடந்திருந்தனர்.

லஹிரு திரிமான்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுவளித்து ஓட்டங்களை குவித்த போதும், மொஹமட் நபி இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆட்டம் காண வைத்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 144 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்த நிலையில், மொஹமட் நபி ஓரே ஓவரில் லஹிரு திரிமான்ன, குல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்ற, இலங்கை அணி 146 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குசல் பெரேரா மாத்திரம் களத்தில் நிற்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேற தொடங்கினர். மொஹமட் நபியின் ஓவருக்கு அடுத்த ஓவரில் தனன்ஜய டி சில்வா ஆட்டமிழக்க, திசர பெரேரா ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக இசுரு உதானவும், இலங்கை அணிக்காக ஓட்டங்களை குவித்திருந்த குசல் பெரேராவும் (78) ஆட்டமிழக்க இலங்கை அணி முற்றுமுழுதாக தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்தது.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது விக்கெட்டினை இசுரு உதான கைப்பற்றியதுடன், அதற்கு அடுத்த ஓவரில் நுவன் பிரதீப்பின் பந்து வீச்சில், திசர பெரேராவின் அற்புதமான பிடியெடுப்பின் மூலம் ஹஷரதுல்லாஹ் சஷாய் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நுவன் பிரதீப் சிறப்பாக பந்து வீச, அவரது மூன்றாவது ஓவரில் ஹஷ்மதுல்லாஹ் ஷஹிடி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், பந்து வீச்சு மாற்றமாக சிறப்பான பிடியெடுப்பினை நிகழ்த்திய திசர பெரேரா அழைக்கப்பட்டிருந்தார். தனது முதல் ஓவரை அபாரமாக வீசிய திசர பெரேர ஆப்கானிஸ்தான் அணியின் முக்கியமான துடுப்பாட்ட வீரர் மொஹமட் நபியின் விக்கெட்டினை கைப்பற்றினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்பதீன் நயீப் மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நஜிபுல்லாஹ் சத்ரான் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை குவிக்க, ஆப்கானிஸ்தான் அணி 100 ஓட்டங்களை கடந்தது. தொடர்ந்தும் இருவரும் சிறப்பாக ஆட, இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அழுத்தமற்ற வகையில் பந்து ஓவர்களை வீசினர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி இலகுவாக ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்நிலையில், தனது 7ஆவது ஓவரில் நுவன் பிரதீப், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்பதீன் நயீபின் (23) விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய நுவன் பிரதீப் தன்னுடைய அடுத்த ஓவரில் ரஷீட் கானின் விக்கெட்டினை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியை தடுமாற்றத்துக்கு உள்ளாக்கினார். அத்துடன், ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சு பிரதியையும் பதிவுசெய்தார்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி அழுத்தத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாட, நஜிபுல்லாஹ் சத்ரான் தொடர்ந்தும் நிதானமாக ஆடினார். இதற்கிடையில் திமுத் கருணாரத்ன லசித் மாலிங்கவை பந்துவீசுவதற்கு அழைத்ததுடன், பின்வரிசை துடுப்பாட்ட வீரரான தவ்லத் சத்ரானின் விக்கெட்டினை மாலிங்க வீழ்த்தி அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும் நஜிபுல்லாஹ் சத்ரான் இலங்கை அணிக்கு அச்சுறுத்தும் வகையில் துடுப்பெடுத்தாடி தனியாளாக ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும், திமுத் கருணாரத்ன அபாரமான களத்தடுப்பின் மூலம், நஜிபுல்லாஹ் சத்ரானை ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இவரின் ஆட்டமிழப்பு போட்டியின் திசையை இலங்கை அணி பக்கம் மாற்றியது. இறுதியில் லசித் மாலிங்க தனக்கே உரித்தான யோர்க்கர் பந்தின் மூலம் இறுதி விக்கெட்டினை கைப்பற்ற இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது.

இதன்படி வெற்றிபெற்ற இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி 10ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7ஆம் திகதி பிரிஸ்டல் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி 8ஆம் திகதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை