ஹுங்கம துறைமுகத்தில் 27 மீன்பிடி படகுகள் தீயில் எரிந்து நாசம்

150 குடும்பங்கள் நிர்க்கதி

ஹுங்கம, கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 கண்ணாடி இழை மீன்பிடி படகுகள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இவற்றில் எழு படகுகள் பாதியளவில் எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திடீர் தீ விபத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ஹுங்கம, கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தினுள் மீன் வாடியில் முதலில்

தீப் பற்றியதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 27 கண்ணாடி இழை படகுகளுக்கும் தீ பரவியதில் அவை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

24 ஆம் திகதி இரவு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் படகுகள் அனைத்தும் அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. படகுகளில் வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களும் ஏற்றப்பட்டிருந்தன. சில படகுகளில் அவட்போட் என்ஜின்களும் பொருத்தப்பட்டிருந்தது. தீ பரவுவதைக் கண்ட மீனவர்கள் தீயை அணைக்க தங்காலை நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியை நாடினர். இவர்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

படகுகள் எரிந்துள்ளமையால் சுமார் 5 கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இப்படகுகள் மூலம் தொழில் புரிந்து வந்த சுமார் 150 குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. தீ பரவுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப் படவில்லை. இதன் பின்னணி என்ன என்பது தொடர்பாகவும் சம்பவம் தொடர்பாகவும் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை