19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதிக்கு துரோகம்

அரசியலமைப்பை பிரதமர் முறைமைக்கு மாற்ற முயன்றதாலேயே நெருக்கடி நிலை

ஜனாதிபதி முறையிலான அரசியலமைப்பை 19 ஆவது திருத்தத்தினூடாக பிரதமர் முறையிலான அரசியலமைப்பாக மாற்ற முயன்றதாலே அரசியலமைப்பு நெருக்கடி நிலை உருவானது. ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலும் சர்ச்சை உருவாகியுள்ளது என சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். ஜனாதிபதியின் அரசியலமைப்பு விவகார ஆலோசகராக இருந்த ஜெயம்பதி விக்ரமரத்ன அவருக்குத் துரோகம் செய்து பிரதமரிடம்அதிகாரம் செல்லும் வகையிலான திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், அன்றிலிருந்து யாருக்கு சார்பாக செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாவதாகவும் கூறினார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 மே 21, ஆகஸ்ட் 17 , அல்லது ஜனவரி 8 எவற்றில் நிறைவடைகிறது என்பது தொடர்பில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக கூறிய அவர், உச்ச நீதிமன்றமே உரிய வியாக்கியானம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமபாதி அதிகாரம் செல்லும் வகையில் திருத்தம் செய்ததாலே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விளக்கமளித்த அவர்,

மக்களினதும் சிவில் அமைப்புகளினதும் கோரிக்கை படி அரசியலமைப்பில் இருந்த சர்வாதிகார அதிகாரங்கள் நீங்கி ஜனநாயக ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டன. அது சிறந்த அரசியலமைப்பு மாற்றமாகும்.

ஆனால், 19 ஆவது திருத்தத்தில் இருக்கும் அராஜக நிலை தற்பொழுது உணர ஆரம்பித்துள்ளது. அரச நிர்வாகத்தின் போது ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்பட்டதினூடாக பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. பல ஆணைக்குழுக்கள் செயலிழந்துள்ளன.அரசியலமைப்பு பேரவையினூடாக இடம்பெறும் நீதிபதி நியமனங்களில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லத் தேவையில்லா விடயங்களை மாற்றவே ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அவராக விரும்பியே தனது அதிகாரங்களைக் குறைக்க முன்வந்தார்.ஆனால், சர்வஜனவாக்கெடுப்பினூடாக அனுமதி பெற வேண்டிய விடயங்களும் கூட மாற்றப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.ஆறு வருடங்களுக்கே மைத்திரிபால சிரிசேனவை மக்கள் நியமித்தார்கள். ஆனால், 19 ஆவது திருத்தத்தில் அது 5 வருடங்களாக குறைக்கப்பட்டன.இதன் படி ஜனவரி 8 உடன் அவரின் காலம் முடிவதாக ஒரு தரப்பு கூறுகின்றது. சபாநாயகர் கையொப்பம் இட்ட பின்னர் தான் 19 ஆவது திருத்தம் சட்டமாக மாறுகிறது.

2015 மே 21 ஆம் திகதி இந்த திருத்தம் செய்யப்பட்டதால், 2020 மே வரை ஜனாதிபதிக்கு பதவியில் இருக்க முடியும் என சிலர் வாதிடலாம்.இது தவிர 19 ஆவது திருத்தத்தின் 3 ஆவது சரத்தின் பிரகாரம் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னரே இந்தச் சட்டம் அமுலாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறானால், ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்குப் பின்னர் தான் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்தக் குழப்பத்தினால் ஜனாதிபதிக்கு நான்கரை வருடங்கள் தான் பதவி வகிக்க நேரும் நிலையும் உருவாகியுள்ளது.

19 ஆவது திருத்தத்தில் பாரிய அரசியலமைப்பு ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றன.

இது தொடர்பில் வியாக்கியானம் பெற உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், ஜனாதிபதி தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க தயாராவதாக விமர்சனம் வரும்.

இந்த நிலையிலே 18,19 ஆவது திருத்தங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறினார். அரசுக்குள் நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு இந்த அரசியலமைப்பு நெருக்கடி நிலையே காரணமாகும்.

19 ஆவது திருத்தத்தை அன்று ஜனாதிபதியின் அரசியலமைப்பு விவகார ஆலோசகராக இருந்து ஜெயம்பத்தி விக்ரமரத்ன தான் தயாரித்தார். அவரை நம்பி வழங்கிய பொறுப்பை ஜெயம்பத்தி விக்ரமரத்ன தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அன்றிலிருந்து (2015) அவர் யாருக்கு சார்பாக செயற்பட்டார் என்பது இந்த சிக்கலினூடாக தௌிவாகிறது. தான் நியமித்த ஆலோசகர் தனக்கு துரோகம் செய்வார் என ஜனாதிபதி நம்பியிருக்க மாட்டார்.

ஜனாதிபதி முறையிலான அரசியலமைப்பை பிரதமர் முறையிலான அரசியலமைப்பாக மாற்ற அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாதி பாதி அதிகாரம் செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். தனக்கு அதற்குரிய அதிகாரம் இருப்பதாக ஜனாதிபதி கருதினாலும் அது மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால், பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி அதிகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பினால் தான் மாற்ற முடியும்.

இரவு வரை ஆராய்ந்து அவசர அவசரமாகவே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தனக்கு ஜனாதிபதி தேர்தலினூடாக அதிகாரத்திற்கு வர முடியாது என்பதால், பிரதமர் தான் 19 ஆவது திருத்தத்தை தனக்குச் சாதகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்த அரசியலமைப்பு குழப்ப நிலை நீடிப்பதையே அவர் விரும்புகிறார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் ஜனாதிபதியின் கழுத்தை வெட்டியுள்ளார்.

இந்தக் குழுப்ப நிலை அடுத்த ஆட்சியிலும் தொடரலாம்.

19 ஆவது திருத்தத்தினூடாக எழுத்துள்ள அரசியலமைப்பு நெருக்கடி நிலையினால், அடுத்த அரசாங்கத்திலும் பிரச்சினை எழும். ஒரே கட்சியாக இருந்தால் பிரச்சினை இருக்காது.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை