19 பிரதான கருப்பொருள் நிறைவேற்றப்படவில்லை

பிரச்சினைக்கு இதுவே காரணம்

19ஆவது திருத்தச்சட்டம் நாட்டுக்கு சாபக்கேடு என ஜனாதிபதி கூறியுள்ளமை கவலையளிக்கிறது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரதான கருப்பொருள் நிறைவேற்றப்படாமல்போனமையே நிறைவேற்றுத்துறைக்கும், சட்டவாக்கத்துறைக்கு முறுகல்கள் ஏற்பட காரணமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே அவரின்

பிரதான தேர்தல் வாக்குறுதியாகும். ஜே.வி.பி. முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆகவே, 19ஆவது திருத்தச்சட்டம் நாட்டுக்கு சாபக்கேடு அல்ல என்பதை அவருக்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு தேர்தலில் கொடுத்த பிரதான வாக்குறுதியாகும். சோபித்த தேரரின் எதிர்பார்ப்பும் அதுவாகதான் இருந்தது. ஆனால், தற்போது நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச்சட்டத்தை நாட்டுக்கு சாபமென அவர் கூறியுள்ளமை கவலையளிக்கிறது.

19ஆவது திருத்தச்சட்டத்தில் குறைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், அதனை முற்றுமுழுதாக நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 19ஆவது திருத்தச்சட்டம் ஒரு சட்டமூலமாக கொண்டுவரப்பட்ட போது அதன் கருப்பொருள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அமையவும், சட்ட மாஅதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்தின் கோரிக்கைகளுக்கு அமையவும் மறுசீரமைக்கப்பட்டமையின் காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

19ஆவது திருத்தச்சட்டத்தின் எதிர்பார்ப்புகளை முழுமையாக எம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனமையே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம். ஜனாதிபதியும் இச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார். நிறைவேற்றுத்துறைக்கும், சட்டவாக்கத்துறைக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்யதால் இச்சட்டமூலம் சிறந்த சட்டமூலமாகும்.

18ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஆனால், 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி மீண்டும் நாம் பின்னோக்கி பயணிக்க முடியாது. முன்னோக்கி பயணிப்பதற்கான வழிமுறைகளையே செய்ய வேண்டும்.

ஜே.வி.பி. முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வு கிடைக்கும். ஜே.வி.பியின் பிரேரணைக்கு நான் முழுமையான ஆதரவை வழங்குகின்றேன்.

19ஆவது திருத்தச்சட்டம் நாட்டுக்கு சாபக்கேடு அல்ல என்பதை ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். அதனை வைத்துக்கொண்டு நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை