19: நெருக்கடி நிலைக்கு சு.கவும், ஐ.ம.சு.முவுமே காரணம்

ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து கொண்டு ஜனாதிபதி முறையிலான அரசியலமைப்பை பிரதமர் முறையிலான அரசியலமைப்பாக மாற்றித் துரோகம் செய்ததாக சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயம்பத்தி விக்ரமரத்ன முற்றாக நிராகரித்துள்ளார். அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 2015 மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர் அதில் சு.கவும்.ஐ.ம.சு.முவும் பல திருத்தங்களை மேற்கொண்டதாலே நெருக்கடி நிலை உருவானதாகவும் தெரிவித்தார்.

19 ஆவது திருத்தம் தொடர்பில் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தினகரனுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

அன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினாலே 19 ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டது.நானும் அதில் அங்கம் வகித்து எனது பங்களிப்பை வழங்கினேன். இதனை நான் முழமையாக தயாரித்ததாக சித்தரிக்க முயல்கிறார்கள்.

ஆனால், உபகுழுவில் ஆராயப்பட்டு அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட நகல் சட்டவரைஞர் திணைக்களத்தினால் சட்டமூலமாகத் தயாரிக்கப்பட்டது.என்னால் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக தயாரிக்க முடிந்திருந்தால் ஜனாதிபதி முறையை முற்றாக இரத்து செய்யும் வகையில் சட்டமூலம் தயாரித்திருப்பேன்.

அரசியலமைப்பு விவகார அமைச்சரினால் மாத்திரம் அரசியலமைப்பொன்றை தயாரிக்க முடியாது என்று 1972 அரசியலமைப்பைத் தயாரித்தது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த கொல்வின் ஆர் டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.அதனை தான் இங்கும் கூறுகிறேன். எனக்கு தேவையானவாறு மாத்திரம் 19 ஆவது திருத்தத்தை தயாரிக்க முடியாது.

முதலில் தயாரித்த சட்ட நகலில் பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால், ஜனாதிபதி தரப்பிலும் ஐ.ம.சு.மு தரப்பிலும் அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்காக இவற்றை ஏற்க நேரிட்டது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் எந்த சட்டச் சிக்கலும் கிடையாது. அவரின் காலம் 5 வருடங்களில் நிறைவடைவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட மே 21 வரை அவரின் பதவிக்காலம் இருக்கும் என்பதை ஏற்க முடியாது. அரசியலமைப்பின் இடைக்கால ஒழுங்குவிதிகளில் அவை தௌிவு படுத்தப்பட்டுள்ளன. அவர் 6 வருடத்திற்குத் தெரிவானாலும் 5 வருடமாக அது திருத்தப்பட்டுள்ளது.எனவே, ஜனவரி 8 உடன் அவரின் காலம் நிறைவடைகிறது. சபாநாயகர் கையொப்பமிட்ட திகதியில் இருந்து தான் சட்டம் நிறைவேறுகிறது என்று வாதம் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பிலும் இடைக்கால ஒழுங்குவிதிகளில் தௌிவு படுத்தப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் குழுப்பம் இருக்கிறது. ஆரம்ப சட்டமூலத்தை மாற்றியதாலே இந்த நிலை ஏற்பட்டது.வர்த்தமானியில் வௌியிட்டதை நசுக்கி அழுத்தங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களித்தது போன்று நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பது தான் இந்த நெருக்கடிக்குத் தீர்வாக அமையும்.

நான் ஐ.தே.கவின் தேவைபடி 19 ஆவது திருத்தத்தை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அன்று நான் ஐ.ம.சு.முவிலே போட்டியிட இருந்தேன். ஐ.ம.சு.முவின் தேசிய பட்டியிலில் கூட எனது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தது.ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட முடியாதுஎன்பதாலே ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ஹிருணிகா பிரேமச்சந்திர அடங்கலாக நாம் வௌியேறினோாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை