19 ஜனநாயகத்தை பலப்படுத்த மிகவும் உந்து சக்தி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 18 மற்றும் 19ஆவது திருத்தச்சட்டமூலங்கள் நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்தே 19ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றியிருந்தோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, அப்போதிருந்த ஏகாதிபத்திய ஜனாதிபதி ஆட்சியை இல்லாமல் செய்வதாக வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே 2015 ஜனவரி 8ஆம் திகதி எமக்கு வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதற்கு அமையவே ஏகாதிபத்திய வாதத்தை உள்ளடக்கிய 18ஆவது திருத்தச்சட்டமூலத்தை நீக்க முடிந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டு தடவைகளே ஒருவரால் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முடியும். எனினும், மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டு தடவைகளே போட்டியிட முடியும் என்பதை வரையறையை நீக்கி எத்தனை தடவைகளும் போட்டியிட முடியும் என்பதை 18வது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவந்தார். இதன் ஊடாக அவரின் ஏகாதிபத்திய ஆட்சியை புரிந்துகொள்ள முடிந்தது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ தனது கட்சியின் செயலாளராகவிருந்தவருடன் பேட்டியிட்டு தோல்வியடைய நேர்ந்தது. எந்தவொரு நபரும் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லையென்பது இதன்மூலம் புலனானது.

எனினும், நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றிய 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடு ஜனநாய ரீதியில் முன்சென்றுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கலாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

மகேஸ்வரன் பிரசாத்

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை