166 ஓட்டங்கள் பெற்று வோர்னர் சாதனை

உலக கிண்ண கிரிக்கெட்

தொடரில் அதிகூடிய  ஓட்டங்களுடன் முதலிடத்தில்

டேவிட் வோர்னர்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 26ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியினை அவுஸ்திரேலியா 48 ஓட்டங்களால் வீழ்த்தியது.

நொட்டிங்கம் நகரில் கடந்த (20) ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தேர்வு செய்தார்.

இந்த உலகக் கிண்ண தொடரின் தமது கடைசி மோதலில் இலங்கை அணியினை தோற்கடித்த அவுஸ்திரேலியா இப்போட்டியில் மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது. அந்தவகையில், மார்கஸ் ஸ்டோனிஸ், அடம் சம்பா மற்றும் கோல்டர்-நைல் ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாட ஷோன் மார்ஷ், கேன் றிச்சர்ட்ஸன் மற்றும் ஜேசன் பெஹ்ரேன்ட்ரோப் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்த பங்களாதேஷ் அணியும் இப்போட்டிக்காக இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, ருபெல் ஹொசைன், சபீர் ரஹ்மான் ஆகியோர் மொஹமட் சயீபுத்தின், மொசாதிக் ஹொசைன் ஆகியோருக்கு பதிலாக பங்களாதேஷ் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு அதன் தலைவர் ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர் ஜோடி 121 ஓட்டங்கள் பகிர்ந்து சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை வழங்கியது. பின்னர் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த ஆரோன் பின்ச் அவரின் 24ஆவது அரைச்சதத்தோடு 51 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 53 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

தொடர்ந்து டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா ஆகியோர் வழங்கிய அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட டேவிட் வோர்னர் அவரின் 12ஆவது ஒருநாள் சதத்துடன் 147 பந்துகளில் 14 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 166 ஓட்டங்களை பெற்றதோடு, உஸ்மான் கவாஜா அவரின் 11ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 72 பந்துகளில் 10 பெளண்டரிகளுடன் 89 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதோடு, கிளேன் மெக்ஸ்வெலும் 10 பந்துகளில் 32 ஓட்டங்கள் பெற்று அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் செளம்யா சர்க்கர் 3 விக்கெட்டுகளை சாய்க்க, முஸ்தபிசுர் ரஹ்மானும் ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான மிகவும் கடினமான 382 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பங்களாதேஷ் அணி பதிலுக்கு துடுப்பாடியது.

பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது. பங்களாதேஷ் அணி இப்போட்டியில் பெற்ற 333 ஓட்டங்கள் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை போராடிய முஸ்பிகுர் ரஹீம் அவரின் 7ஆவது ஒருநாள் சதத்தோடு 97 பந்துகளில் 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 102 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், மஹ்மதுல்லா அவரின் 21ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இவர்களோடு தமிம் இக்பால் அவரின் 47ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 62 ஓட்டங்கள் பெற்றும், சகீப் அல் ஹசன் 41 ஓட்டங்கள் பெற்றும் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்காக முயற்சி செய்திருந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் மிச்செல் ஸ்டார்க், கோல்டர்-நைல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

 

 

Sat, 06/22/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக