உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெற்று உலக கிண்ண கிரிக்கெட் திருவிழாவில் 8-வது நாளான நேற்று நாட்டிங்காமில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி, மேற்கிந்திய தீவு அணியை எதிர்கொண்டு விளையாடியது.இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டங்களால் திரில் வெற்றியை ருசித்தது.

மேற்கிந்திய தீவு அணி 289 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய அவ்வணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்களை பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது .அவ்வணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கையில் 21 ஓட்டங்களையும் விக்கெட் காப்பாளர் சாய் ஹோப் 68 ஓட்டங்களையும் பூரன் 40 ஓட்டங்களையும் அணியின் தலைவர் ஹோல்டர் 52 ஓட்டங்களையும் பெற்றதே அதிகூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும்.

பந்து வீச்சில் ஆஸி அணி சார்பாக 10 ஓவர்கள் பந்து வீசிய மிச்சல் ஸ்டார்க 46 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டையும் கமின்ஸ் இரண்டு விக்கெட்டையும் ஸம்பா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 6 ஓட்டங்களுக்கும், டேவிட் வோர்னர் 3 ஓட்டங்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களும் மேற்கிந்திய தீவு பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் அரை சதம் அடித்தார். அதேசமயம், பந்துவீச்சாளரான நாதன் கொல்டர் நைல், சரியான நேரத்தில் கைகொடுத்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அவர், 60 பந்துகளில் 92 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

48.5 ஓவர்களில் அவுஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்கள் சேர்த்தது. அதிக பட்சமாக பந்து வீச்சாளரான நாதன் கொல்டர் நைல் 92 ஓட்டங்களும் ஸ்டீவன் ஸ்மித் 73 ஓட்டங்களும் பெற்றனர்.

மேற்கிந்திய தீவு அணி சார்பில் கார்லோஸ் பரத்வெயிட் 3 விக்கெட்டும், ஓஷேன் தோமஸ் மற்றும் அண்ட்ரே ரஸல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்டர் நைல் தெரிவானர்.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை