119 க்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தாக்குதலை தடுத்திருக்கலாம்

பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் என்ற பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு சாதாரண பிரஜைகளாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, தகவலைக் கூறியிருந்தாலும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எனவே தாக்குதல்கள் நடத்தப்படப் போவதாகத் தகவல் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளுக்கு,

குற்றவியல் சட்டக்கோவையின் 112வது சரத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தண்டனை வழங்குவதற்கு இடமிருக்கையில்,உண்மையான குற்றவாளிகளை ஒழிப்பதற்கே அரசாங்கம்

தெரிவுக் குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஏப்ரல் 4 ஆம் திகதி, 9ஆம் திகதி, 20ஆம் திகதி மற்றும் 21ஆம் திகதி எனத் தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகளுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. தமக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய உரிய நடவடிக்கையை எடுக்காதுவிட்டு தற்பொழுது தெரிவுக்குழுவின் முன்னால் சென்று இவர்கள்,எமக்குத் தெரியாது, நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை எனக் காரணங்களைக் கூறிவருவதாகவும் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர மற்றும் துமிந்த திஸ்ஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி படுகொலைச் சம்பவமே இடம்பெற்றுள்ளது. உயிர்க்கொலையொன்று நடைபெறலாம் எனத் தெரிந்தும் அதனைத் தடுக்காது குற்றச்செயல் இடம்பெறுவதற்கு இடமளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமென குற்றவியல் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், இதனைச் செய்யாது தெரிவுக்குழுவை அமைத்து உண்மையான பொறுப்பாளிகளை ஒழிப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. அது மாத்திரமன்றி பலாத்காரமாக அமைச்சரவையைக் கூட்டி மேலும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் முயல்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் துமிந்த திஸ்ஸாநாயக்க குறிப்பிடுகையில், சுதந்திரக் கட்சியினராகிய நாம் தெரிவுக்குழுவைக் கோரவில்லை.

குண்டுத் தாக்குதலின் பின்னர் விசாரிப்பதற்காக ஜனாதிபதி மூவரடங்கிய குழுவை அமைத்திருந்த நிலையில் தெரிவுக்குழு அவசியமில்லையென்றே நாம் தெரிவித்திருந்தோம். இருந்தபோதும் அதனை எதிர்க்கவில்லை. ஆனாலும் அதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைப் பார்த்தபோது விசாரணைகள் எந்தப் பக்கத்தை நோக்கிச் செல்லப்போகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

புலனாய்வுத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவது மீண்டுமொரு மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுப்பைப் போன்ற காட்டிக்கொடுப்புக்கு வழிகோலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அவர்கள் இருவருமே தீர்த்துக் கொள்ளவேண்டும். அமைச்சரவையை கூட்டாமலிருப்பது போன்ற தவறுகளை யார் செய்தாலும் தவறே. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்கக் கூடாது.

இதற்கு ஏற்ப ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கிடையிலான பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில், ஏற்கனவே மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களே நியமிக்கப்பட்டிருப்பதாக மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

Fri, 06/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக