மாலி கிராமத்தின் மீது பயங்கர தாக்குதல்: சுமார் 100 பேர் பலி

டொகோன் இனக் குழுவினரின் வாழ்விடமான மத்திய மாலி கிராமம் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொப்டி பிராந்தியத்தின் சொபாம் டா என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இங்கு கொல்லப்பட்ட சடலங்கள் இன்னும் தேடப்பட்டு வரும் நிலையில் இதுவரை 95 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.

இதில் பல சடலங்களும் தீமூட்டப்பட்டிருப்பதோடு மேலும் பத்தொன்பது பேர் காணாமல்போயுள்ளனர்.

மாலியில் அண்மைக் காலங்களில் இவ்வாறான பல தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதோடு இதில் சில இனக்குழுக்களாலும் மேலும் சில ஜிஹாத் குழுக்களாலும் நடத்தப்பட்டுள்ளன.

டொகோன் வேட்டைக்காரர்களுக்கும் பகுதி நாடோடிகளான புலானி மேய்ச்சல்காரர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பதாக மாலி அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

எனினும் புலானிக்களே இரவு வேளையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக அருகில் உள்ள பன்காஸ் நகர மேயர் மெளலாயி குவின்டோ குறிப்பிட்டுள்ளார்.

“ஆயுதங்களை ஏந்திய சுமார் 50 பேர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிரக் வண்டிகளில் வந்திறங்கினர்” என்று உயிர் தப்பிய ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். “ஆரம்பத்தில் அவர்கள் கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். அதன்பின் தாக்குதல் நடத்தியதோடு தப்பிக்க முயன்றவர்களைக் கொன்றனர். பெண்், சிறுவர்கள், முதியவர்கள் எவரையும் விட்டுவைக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

“தற்போதுவரை 95 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஏனையவர்களை நாம் தொடர்ந்து தேடி வருகிறோம்” என்று உள்ளுர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டொகோன் மக்கள் மத்திய மாலியில் பல நூற்றாண்டு காலமாக விவசாயிகளாக வாழ்ந்து வருகின்றனர். பறுபுறம் நாடோடிகளான புலானிக்கள் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து வந்த கால்நடை வளர்ப்பாளர்களாவர்.

வளங்களை பகிர்ந்து கொள்வதில் இந்த இரு இனங்களுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் இடம்பெற்று வந்தபோதும் 2012 ஆம் ஆண்டு வடக்கு மாலியில் இஸ்லாமியவாதிகளின் எழுச்சியை அடுத்து இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட புலானிக்கள் இஸ்லாமியவாத குழுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. மறுபுறம் டொகோன் பாதுகாப்பு அமைப்பு தமக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக புலானிக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதே பிராந்தியத்தில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 புலானி கிராம மக்கள் கொல்லப்பட்டனர்.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை