உணர்வின் சினிமா The sons room

2001ஆம் ஆண்டு இயக்குனர் நானி மொராட்டியினால் இத்தாலியில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் The sons room மனித உணர்வுகளின் வலியினை மிக நுட்பமான முறையில் படம் பிடித்த இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

ஒரு சவால் மிக்க சூழலைத்தான் ஒரு திரைப்படத்தின் இயக்குனர் புரிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கிறது. சில திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பு மிகவும் பிரமாண்டமாக பேசப்படும் ஆனால் அப்படம் வெளிவந்ததன் பின்பு அத்திரைப்படம் பற்றிய ஏராளமான விமர்சனங்கள் உலாவும்.

அதே போல சில திரைப்படங்கள் வெளிவருவதே தெரியாது. ஆனால் கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி ஈட்டிய படைப்பாக அமையும். இதனை நன்கு புரிந்து கொண்ட ஐரோப்பியர்கள் சினிமாவின் மீது கூடிய தாக்கங்களை செலுத்த முனைந்தனர்.

மனிதனுடைய வாழ்வியலை யதார்த்த பூர்வமாக காட்சிப்படுத்தியதன் ஊடாக ஏராளமான ஐரோப்பிய திரைப்படங்கள் உலகின் சிறந்த சினிமாக்களின் பட்டியலில் மிக சுலபமாக நுழைந்து விடுகின்றன எனலாம். 

இவ்வாறு 2001ஆம் ஆண்டு இயக்குனர் நானி மொராட்டியினால் இத்தாலியில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் The sons room மனித உணர்வுகளின் வலியினை மிக நுட்பமான முறையில் படம் பிடித்த இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. மனநல மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் ஜியோனியின் மகனான ஆன்ரியா ஒரு விபத்தில் திடீரென இறந்து போகிறான்.

இவ்விபத்து ஜியோனியின் வாழ்வியலையும், குடும்பத்தினையும் ரொம்பவும் பாதிக்கிறது. தன்னுடைய மகனின் விபத்திற்கு தானே காரணம் என ஜியோனி தினமும் தன்னை வருத்திக் கொள்கிறான். இவ்வாறான நேரத்தில் ஜியோனியின் மகனான ஆன்ரியா காதலித்த அரியானா அவன் இறந்தது தெரியாமல் ஜியோனியின் வீட்டிற்கு வருகிறாள்.

அவ்வாறு வந்ததன் பிறகே ஆன்ரியாவின் இறப்பும், அவனது குடும்பம் சுமக்கின்ற வேதனையும் அரியானாவிற்கு தெரியவருகிறது. பிறகு தன்னை தேர்த்திக் கொண்ட அரியானா ஜியோனியின் குடும்பத்தினை ஆறுதல்படுத்தி துன்பத்திலிருந்து மீட்கின்ற ஒரு கதாப்பாத்திரமாக மாறுகிறாள்.

மிகவும் சுவாரஷ்யமான வார்த்தைகளுடனும், அற்புதமான காட்சியமைப்புக்களுடனும் நேர்மையான அழகிய கதையுடனும் வடிவமைக்கப்பட்ட The sons room இலக்கிய ரசனையுடன் வெளிவந்த அற்புதமான படைப்பாகும். இறந்துபோன தன்னுடைய காதலன் ஆன்ரியாவினுடைய குடும்பத்தின் துன்பங்களைப் போக்குவதற்காக அவனுடைய காதலி அரியானா எடுக்கின்ற எண்ணற்ற முயற்சிகள் நாடகப்பாங்கினை விட்டு நகர்ந்து காத்திரமான சினிமாப் போக்கினைக் கொண்டு படமாக்கப் பட்டிருப்பதினை எம்மால் அவதானிக்க முடியும்.

ஒவ்வொரு காட்சியமைப்பினையும் கவனத்தில் கொண்டு மிகவும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும் The sons room உலகின் கவனத்தினை ஈர்த்த மிக முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும்.

இத்திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தினைப் பெற்றுக் கொண்ட இயக்குனர் நானி மொராட்டி அற்புதமான ஒரு இலக்கியவாதி என்பதினை அவரது அனைத்து படைப்புக்களும் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன.  

Sat, 05/25/2019 - 08:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை