றிk;ig சீzp ,தீஹீpg; னிghl;bஜீ;பி ஹீபிஹீp

ஐ.பி.எல். தொடரில் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்ற மும்பை அணி ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றுள்ளது. தோல்வியடைந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது குவாலிபையரில் விளையாடவுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தன்மையை கொண்ட சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறுவதற்கு கடினமாக அமைந்திருந்த இந்த ஆடுகளத்தில் ஓட்டங்களை குவிப்பதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தடுமாறியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ராஹுல் சஹார் மற்றும் இந்த போட்டிக்கு உள்வாங்கப்பட்டிருந்த ஜெயன்ட் யாதவ் ஆகியோர் மும்பை அணிக்கு பந்து வீச்சில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இறுதிக்கட்டத்தில் அம்பத்தி ராயுடு மற்றும் மகேந்திரசிங் டோனி ஆகியோர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை நிதானமாக கட்டியெழுப்பினர். இவர்களின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ஓட்டங்களையும், மகேந்திரசிங் டோனி 37 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, முரளி விஜய் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ராஹுல் சஹார் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா மற்றும் ஜெயன்ட் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 132 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய மும்பை அணிக்கு, சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை அணி வெற்றியை நெருங்கியது.

இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, மும்பை அணி 100 ஓட்டங்களை கடந்தது. இதில், இஷான் கிஷான் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், இறுதிவரை களத்தில் நின்ற சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 71 ஓட்டங்களை குவித்து மும்பை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார். இறுதியாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 13 ஓட்டங்களை பெற்றார்.

இதன்படி, 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆவது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அத்துடன், இறுதியாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளிலும் மும்பை அணி வெற்றியையும் பதிவுசெய்தது.

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை