அரசியல் குழுவொன்றினால் வன்முறைகள் கட்டவிழ்ப்பு

அரசை கஷ்டத்தினுள் தள்ளுவதே இலக்கு

அரசாங்கத்தை கஷ்டத்துக்குள் தள்ளும் நோக்கில் அரசியல் பின்புலத்தைக் கொண்ட குழுவொன்று திட்டமிட்டு வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திட்டமிட்ட குண்டர்கள் குழு வன்முறைகளில் ஈடுபட்டமைக்கான சாட்சிகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.

அரசியல் நோக்கம் கொண்டவர்களால்

மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பயங்கரவாதிகள் குறித்த விசாரணைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிரு்பபதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நவீன் திஸ்ஸாநாயக்க ஆகியோரே இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினர்.

அரசாங்கமே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய். அவ்வாறானதொரு தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அரசியல் நோக்கம் கொண்டவர்களால் இந்த வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 70ற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு பொலிஸாரும், முப்படையினரும் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் வன்முறைகளின் ஊடாக இலாபமடையப் பார்க்கின்றனர்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 99 வீதமான விசாரணைகளை பூர்த்திசெய்துள்ளனர். எனினும், வன்முறைச் சம்பவங்களால் அவர்களின் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அவர்கள் தமது கவனத்தைச் செலுத்தவேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட திட்டமிட்ட குழுவினரே வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

Thu, 05/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக