பயங்கரவாதத் தாக்குதல், குற்றச்சாட்டுக்களை ஆராய தெரிவுக்குழு வேண்டும்

பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் பின்னர் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கும் சபாநாயகர் உடனடியாகத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால் யார் உண்மை கூறுகின்றனர், யார் பொய் கூறுகின்றனர் என்பதை கண்டறியு முடியும். ஊடக தர்மத்தை மீறும் வகையில் பல ஊடகங்கள் செயற்படுவதுடன், பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் வேண்டுமென்றே தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அழகான நாடு பொருளாதாரத்தில் கஷ்டமான நிலையை நோக்கி நிற்கிறது. பயங்கரவாத செயற்பாட்டை முறியடித்து எதிர்காலத்தில் இவ்வாறான பயங்கரவாதம் ஏற்படாமல் இருக்க சகல இனத்தவர்களும் ஒன்றுபடவேண்டிய தேவைப்பாடு இருப்பதை நியாயமுள்ள அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வார்கள்.

இங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நல்ல ஆலோசனைகளை முன்வைத்தனர். சிலர் என்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்ற, ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களாகும். உத்தியோகபூர்வமாக நான் ஒமானுக்குச் சென்றிருந்தேன். எனினும் நான் நாட்டைவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இலங்கைக்குப் பல பில்லியன் ரூபா முதலீடுகளைக் கொண்டுவருவதற்காக ஏனைய அமைச்சர்களுடன் நான் அங்கு சென்றிருந்தேன். எனினும், நாட்டைவிட்டு தப்பிவிட்டதாக போலிச் செய்திகளை வெளியிட்டனர்.

என்னை பயங்கரவாதத்துடன், அடிப்படைவாதத்துடன் தொடர்புபடுத்துவது ஆதாரமற்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் அடியோடு மறுக்கின்றேன். எனது வியாபார நடவடிக்கைகள் தொடர்பில் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க அப்பட்டமான பொய்களைக் கூறிவருகிறார். 51 நாட்களில் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக பழிவாங்கும் நோக்கில் செயற்படுவது கீழ்மட்டமான அரசியலாகும். அவருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அரசியலுக்கு வந்த நாளில் இருந்து எனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை நான் பகிரங்கப்படுத்தியுள்ளேன்.

என்மீது விரலை நீட்டி நிலைமைகளை திசைதிருப்பி அடிப்படைவாதிகளையும், பயங்கரவாதிகளையும் பாதுகாப்பதற்கே பலர் முயற்சிக்கின்றனர். இஸ்லாம் மதத்தில் பயங்கரவாதத்துக்கோ அடிப்படைவாதத்துக்கோ அனுமதி வழங்கப்படவில்லை.

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சகலருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். குறிப்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு நன்றிகளைக் கூறுகின்றேன். உடனடியாக செயற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.

இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்த பயங்கரவாதத் தாக்குதலினால் நாட்டில் உள்ள 22 இலட்சம் முஸ்லிம்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

பள்ளிவாசல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதாக ஊடகங்களில் காண்பிக்கின்றனர். திகனவில் 30 பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கப்பட்டபோது பள்ளிவாசல்களில் ஆயுதங்களை எடுத்து யாராவது தாக்குதல்களை நடத்தினார்களா? பத்துப்பேர் செய்த பாவத்தை 22 இலட்சம் பேர் மீது திணிக்காதீர்கள்.

நாம் ஏதோ குண்டைக் கொண்டுவந்து வைத்தது போல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எனக்கு 3,500 ஏக்கர் நிலம் இருப்பதாக ஒருவர் கூறித் திரிகின்றார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளேன். ஊடகங்கள் வேண்டும் என்றே என்மீது சேறுபூசும் வகையில் செயற்படுகின்றன. ஊடக நெறி தவறி செயற்படுகின்றார்கள். சில அரசியல்வாதிகள் முஸ்லிம்களை நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறுகின்றனர். இது எமது நாடு, நாம் ஏன் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை