பாடசாலை மாணவர்களது பாதுகாப்புக்கு படைத்தரப்பினர் பூரண உத்தரவாதம்

இலங்கை விமானப்படையினர் நாட்டின் வான் பரப்பின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணிவரும் அதேசமயம் வான் பரப்பை பயன்படுத்தி எந்தவொரு அச்சுறுத்தல்களும் நாட்டிற்குள் வராமல் இருப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துவருவதாக இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்தார்.

அதேபோன்று விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை முடியுமானளவு குறைக்கும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் விமானப்படையின் பங்களிப்பு தொடர்பாக ஊடகங்கள் ஊடாக நாட்டுமக்களுக்கு விஷேட அறிவித்தலை மேற்கொண்ட விமானப்படைத் தளபதி மேலும் குறிப்பிடுகையில்,

பயணிகளை வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ வருகை தருபவர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் தமது கடமைகளை இலகுவாக செய்வதற்கு வசதியாக அமையும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதினம் தொடக்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் இலங்கை விமானப் படை முன்னெடுத்து வருகின்றது.

இன,மத பேதங்களின்றி பாடசாலைகள், சமயதளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஏனைய படைத்தரப்பினருடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே,எவ்வித அச்சமுமின்றி தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்குமாறும் அவர்களது பாதுகாப்புக்கு படைத்தரப்பினர் உத்தரவாதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் சிலர் தேவையற்றவிதத்தில் கலவரத்தை அல்லது வன்முறையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இது போன்ற செயற்பாடுகளில் எவரும் ஈடுப்பட வேண்டாம்.

அவ்வாறு ஈடுப்படுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட தமது கடமைகளை நிறைவேற்ற பாதுகாப்புபடையினர் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றார்.

ஸாதிக் ஷிஹான்

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை