குருநாகல் மருத்துவரை விசாரிக்க நிபுணர்கள் குழு

தவறிழைத்திருந்தால் தண்டனை

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கைதுசெய்யப்பட்ட மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய நிபுணத்துவக் குழுவொன்று அமைக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

மகப்பேற்று நிபுணர்கள் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ சபையின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்படும் என்றும், இக்குழுவினர் உரிய விசாரணைகளை நடத்தி சுகாதார அமைச்சுக்கு அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கைதுசெய்யப்பட்டுள்ள மருத்துவர் 4 ஆயிரம் சத்திர கிச்சைகளை மேற்கொண்டிருப்பதாகவும், 8 ஆயிரம் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டிருப்பதாகவும் முன்பின் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சத்திர சிகிச்சை மேற்கொள்ளும்போது உதவி மருத்துவர்கள், மயக்கமருந்து நிபுணர், தாதியர், உதவியாளர்கள் எனப் பலரும் சத்திர சிகிச்சை கூடங்களில் இருப்பர். இவர்களையும் தாண்டி கருத்தடையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்க முடியுமா என்பது விசாரணையின் மூலமே கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதற்காகவே மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகமான பணத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான விசாரணைகளில் தான் எந்தவிதமான அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லையென்றும் கூறினார். மருத்துவரிடம் தவறு இருந்தால் இலங்கை சட்டத்தின் கீழும், சுகாதார அமைச்சுக்குரிய சட்டத்தின் கீழும் தண்டனை வழங்கப்படும்.

அதேநேரம், குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான அதிகாரம் இல்லை.

எனவே, சகல விடயங்களையும் அமைச்சுக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. எவர் மீதும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தான் நடந்துகொள்ளவில்லையென்றும் குறிப்பிட்டார்.

முதற்கட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னரே அரசாங்க அதிகாரியான குறித்த மருத்துவரை பணியிலிருந்து இடைநிறுத்த முடியும். முதற்கட்ட விசாரணைகள் முடிந்த பின்னரே உத்தியோகபூர்வ விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். குருநாகல் வைத்தியசாலையிலிருந்து குழந்தையொன்று கடத்தப்பட்ட சம்பவத்துடன் குறித்த வைத்தியர் தொடர்புபட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை. இதுபற்றி எந்த முறைப்பாடு பதிவுசெய்யப்படவுமில்லையென்றும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை